ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னத தலைவன்


ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னத தலைவன்
x
தினத்தந்தி 15 April 2018 5:30 AM GMT (Updated: 15 April 2018 5:24 AM GMT)

இன்று (ஏப்ரல் 15-ந்தேதி) ஆபிரகாம் லிங்கனின் நினைவு தினம்.

உலகில் எத்தனையோ மக்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள். இறுதியில் மறைந்து விடுகின்றனர். ஆனால், ஒரு சிலர்தான் சரித்திரத்தில் இடம் பெறுகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் 16-வது அதிபர் ஆபிரகாம் லிங்கன் உலகில் உள்ளோர் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பெற்றவர். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் நம்பிக்கை ஒளியாக திகழ்ந்தவர்.

அமெரிக்காவில் வெள்ளையின மக்கள் அங்கு வாழ்ந்த கருப்பின மக்களை அடிமையாக நடத்தி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிபராக பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். குறிப்பாக, அவர் கொண்டுவந்த ‘நில உரிமைச் சட்டம்’ முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த சட்டத்தின்படி பல லட்சம் ஏக்கர் அரசு நிலங்கள் மக்களுக்கு இலவசமாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க வாழ் கருப்பின மக்களில் நான்கில் ஒருபகுதியினர் நிலஉரிமையாளராக மாறும் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது. வீடு, வாசலின்றி சொந்த நாட்டிலேயே அடிமைபட்டுக் கிடந்த மக்களுக்கு ஆபிரகாம்லிங்கனின் சீர்திருத்தங்கள் பெரும் நன்மை பயக்கியது.

ஆபிரகாம் லிங்கன் வெள்ளையினத்தைச் சார்ந்தவர். அமெரிக்காவில் கென்டகி மாநிலத்தில் ஹாஜென்வில் என்கிற ஊரில் 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தாமஸ்-நான்சி தம்பதிக்கு தவப்புதல்வராய் பிறந்தார். 9 வயதாகும்போது தாயை இழந்தார். அதன்பின்பு, அவருடைய தந்தை சாரா என்பவரை மறுமணம் செய்தார். அவர் ஆபிரகாம் லிங்கனை தனது சொந்த மகனாய் பார்த்தார். அவரை அன்பு செலுத்தி வளர்த்தார்.

இந்த சூழலில், தந்தையின் நிலம் சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டது. இதனால் குடும்பம் வறுமையில் தத்தளித்தது. லிங்கன் மற்ற மாணவர்களைப் போல பள்ளிக்கூடம் சென்று முறையான கல்வி கற்காமல், சுயமாக படித்து அறிவுப்பெற்றார்.

அவரது குடும்பம் 1830-ம் ஆண்டு இல்லினாய்ஸ் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தது. படிக்கும்போது, படகு ஓட்டுதல், கடையில் சிப்பந்தி, நிலஅளவையாளர், ராணுவம் என பல வேலைகளில் சேர்ந்து தந்தைக்கு உதவியாக இருந்தார். சுயமாக படித்து வக்கீலான ஆபிரகாம் லிங்கனுக்கு அரசியலில் பெருத்த ஈடுபாடு வந்தது.

வீக் என்கிற கட்சியில் சேர்ந்து இல்லினாய்ஸ் மக்கள் பிரதிநிதி சபைக்கு 1834-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகாலம் அந்த பதவியை அலங்கரித்தார். பின்பு அமெரிக்காவின் குடியரசு கட்சியில் சேர்ந்து 1858-ல் அந்த கட்சியின் சார்பில் அமெரிக்க நாட்டு செனட் பதவிக்கு போட்டியிட்டார். வெற்றிப் பெறுவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தோல்வியை தழுவினார்.

பிறகு, 1860-ம் ஆண்டு குடியரசு கட்சியின் வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அரசியலில் நுழைந்த காலம்முதல் கருப்பின மக்களின் அடிமைத்தனம் ஒழிய பாடுபடுவதையே லட்சியமாக கொண்டிருந்தார்.

அவர், அதிபராக இருந்த காலகட்டம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் சோதனையான காலம். கருப்பின மக்கள் அடிமைத்தளையிலிருந்து விலக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து உள்நாட்டு யுத்தம் உச்சத்திற்கு சென்றது. அமெரிக்காவின் தெற்கிலிருந்த ஏழு மாநிலங்கள் நாட்டைவிட்டு பிரிவதாக அறிவித்து தங்களுக்குள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டன. ராணுவ மேஜர்களின் ஒத்துழையாமை, மந்திரி சபையில் உடன் இருந்தோரின் மாறுபட்ட கருத்துகள், உள்நாட்டு போரில் அதிக அளவில் மக்கள் சாவு என பல்வேறு சோதனைகள்.

இருந்தபோதும், தன்னுடைய அறிவு, ஆற்றல், திறமை ஒருங்கு சேர மக்கள் சேவையே முதன்மையானது என்பதை உணர்ந்த லிங்கன் திறம்பட செயல்பட்டார். அவரிடமிருந்த மிகப் பெரிய ஆயுதம் அவரது பேச்சுத்திறன். மாற்றுக் கருத்து கொண்டோரையும் பேச்சின் மூலம் வசீகரிக்கும் திறன் மிகுந்தவர். 1863-ம் ஆண்டு நவம்பர் மாதம் கேட்டிஸ்பர்க் என்ற இடத்தில இரண்டு நிமிடங்கள் பேசினார். அவர் உதிர்த்த 272 வார்த்தைகள் கொண்ட அந்த உரை அமெரிக்க வரலாற்றில் சிறப்புமிக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

‘உள்நாட்டு போரை நிறுத்த பல உயிர்களை கொடுக்க வேண்டியிருந்தது. நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய பணி மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இவ்வுலகிலிருந்து சிதைந்துப் போய்விடாமல் காக்கப்பட வேண்டியது ஆகும்’ என்கிற வார்த்தைகள் இன்றும் ஜனநாயக நாடுகளில் பரவலாக மேற்கோள் காட்டப்படும் வாசகம் ஆகும்.

ஆபிரகாம் லிங்கன் 1863-ல் கருப்பின மக்களின் விடுதலைக்கான வரலாற்று சிறப்புமிக்க ‘விடுதலை பிரகடனம்’ கொண்டு வந்தார். பல எதிர்ப்புகள் வந்தாலும் அதனை சமாளித்து பிரிந்து செல்வோம் என்கிற பல மாநிலங்களை அத்திட்டத்தை கைவிடும்படி செய்தார்.

எத்தனை எத்தனையோ கனவுகள். மக்களிடையே பாகுபாடுகள் அற்ற, சமூக, பொருளாதாரத்தில் மேம்பட்ட புதிய அமெரிக்காவை உருவாக்கவேண்டும் என்கிற ஆசையோடும் திட்டத்தோடும் ஆபிரகாம் லிங்கன் செயல்பட்டார். அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற ஆயத்தமானார்.

ஆனால், ஏழு நாட்டு கூட்டமைப்பினை சேர்ந்த ஒற்றன் ஜான் வில்கெஸ் பூத் என்பவன் வேறுவகையில் திட்டமிட்டான். லிங்கனை சுட்டுக் கொன்றுவிட முடிவு செய்தான்.

1865-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதியன்று கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான புனித வெள்ளி தினத்தன்று ‘அவர் அமெரிக்கன் கசின்’ என்கிற நகைச்சுவை நாடகத்தைக் காண லிங்கன் வருவார் என்பதை அறிந்து, வில்கெஸ் பூத் பதுங்கியிருந்து லிங்கனை பின்பக்கமாக தலையில் சுட்டான். மறுநாள் ஆபிரகாம் லிங்கன் இறந்து போனார். ‘ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னத தலைவன் இறந்துவிட்டான்’ என்று உலகமே கண்ணீர் விட்டது.

அமெரிக்காவின் சிறந்த அதிபர் என்று இன்றுவரை கற்றோராலும், சான்றோராலும் புகழப்படுபவர் ஆபிரகாம் லிங்கன்தான். ஏனென்றால் அவர் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்.

- நல்லினி, வழக்கறிஞர்


Next Story