கல்வி வழிகாட்டியான விவசாயி


கல்வி வழிகாட்டியான விவசாயி
x
தினத்தந்தி 15 April 2018 8:44 AM GMT (Updated: 2018-04-15T14:14:30+05:30)

கிராம மக்கள் அனைவரும் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் விவசாயி ஒருவர் ஆசிரியராக மாறி வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றி விட்டார்.

இன்று அவருடைய பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கிறார்கள். தனது முயற்சியால் அவர் படிப்பறிவில்லாத கிராமத்தில் கல்வி எழுச்சியை ஏற்படுத்தி விட்டார்.

அந்த விவசாயி பெயர் கேசவ் சரண். உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்திலுள்ள ஹர்தியா கிராமத்தை சேர்ந்தவர். இவர் 11-ம் வகுப்பு வரை படித்தவர். 1988-ம் ஆண்டு கிராமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து தனது கிராமத்தில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்காக களம் இறங்கியவர், பள்ளிக்கூடம் கட்டியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். கிராமத்தில் பெரும்பாலானோர் எழுதப்படிக்க தெரியாத நிலையில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு படிப்பறிவை போதிக்கும் நோக்கில் வீட்டில் இரவு நேர பள்ளிக்கூடத்தை தொடங்கி இருக்கிறார். நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்கள் ஏராளமானோர் ஆர்வமாக அங்கு படிக்க வந்திருக்கிறார்கள்.

அதை பார்த்ததும் அவர்களுடைய குழந்தைகளையும் இதேபோல் படிக்க வைக்கலாமே என்ற எண்ணம் கேசவுக்கு தோன்றியிருக்கிறது. இவருடைய மூன்று குழந்தைகள் 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளியில் படித்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களை கேசவ் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்திருக்கிறார். அது கடினம் என்பதால் கிராமத்தினர் யாரும் தங்களுடைய பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்கவைக்கும் மனநிலையில் இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

தன் குழந்தைகளை போலவே கிராமத்தில் உள்ள அனைவருடைய குழந்தைகளும் படிக்க வேண்டும் என்று கேசவ் விரும்பியிருக்கிறார். இதுபற்றி கிராமத்தினரிடம் பேசியபோது படிப்புச் செலவை காரணம் காட்டி வெளியூருக்கு பிள்ளைகளை அனுப்ப யாரும் முன்வரவில்லை. இதையடுத்து கிராமத்தில் உள்ளவர்களுக்கு வீட்டில் பாடம் சொல்லிக்கொடுப்பதுபோல் அவர்களுடைய குழந்தைகளுக்கும் கல்வி போதிக்க தொடங்கி இருக் கிறார். ஆரம்பத்தில் 3 குழந்தைகளே படிப்பதற்கு ஆர்வமாக வந்திருக்கிறார்கள். கிராமத்தினர் அனைவருடைய வீட்டுக்கும் சென்று குழந்தைகளை கட்டாயம் படிக்கவைக்க வேண்டும் என்று வற்புறுத்த தொடங்கி இருக் கிறார். அவருடைய தொடர் முயற்சியின் பலனாக 1990-ம் ஆண்டு குழந்தைகள் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்திருக்கிறது. கேசவின் வீடு 3 அறைகளை கொண்டது.

அதனால் கிராமத்தின் அருகில் 4 ஏக்கர் நிலம் வாங்கி பள்ளிக்கூடம் கட்டி முடித்து விட்டார். ஆனால் பள்ளிக்கூடத்தில் போதிய வசதிகளை மாணவர்களுக்கு செய்து கொடுக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார். இந்த தகவல் கல்வித்துறை மந்திரிக்கு தெரியவர, போ திய வசதிகளுடன் பள்ளிக்கு அரசின் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. இப்போது கேசவின் பள்ளிக் கூடத்தில்1320 பேர் படிக் கிறார்கள். அவர்களில் 670 பேர் மாணவிகள். கேசவின் மகன் அருண் குமார், அவருடைய மருமகள் இருவரும் பள்ளியை நிர்வகிக்கிறார்கள். அங்கு 21 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மாணவர்களிடம் குறைந்த அளவே கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 450 மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நல்ல மதிப்பெண் பெற்று உயர் கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

‘‘என் கிராமத்து பிள்ளைகள் நன்றாக படித்து அதிகாரிகளாக வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதனை நனவாக்கும் விதமாக ஏராளமானோர் உயர் கல்வியில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிறார்.

தன்னுடைய கிராமத்திலேயே கல்லூ ரியும் அமைக்கப்பட வேண்டும் என்பது கேசவின் விருப்பமாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Next Story