கல்லட்டி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் பாறையில் மோதி சிறுமி பலி


கல்லட்டி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் பாறையில் மோதி சிறுமி பலி
x
தினத்தந்தி 16 April 2018 3:30 AM IST (Updated: 16 April 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலைப் பாதையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த பாறையில் மோதியது. இந்த விபத்தில் சிறுமி பலியானார்.

மசினகுடி,

கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் வினாயக் (வயது 43). இவர் தனது மனைவி சந்தியா (33), சகோதரி சபித்தா (30), அவரது கணவர் நவீன் (38) குழந்தைகள் ஆதித்யா (2), நிசலோ (8), சம்மன் வீ (6), அவினி (5) ஆகியோருடன் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு நேற்று காரில் கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். காரை வினாயக் ஓட்டினார்.

23-வது கொண்டை ஊசி வளைவை கடந்து கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த பாறையில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் வந்த 8 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி அவினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 7 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் 7 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story