கோவை அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் 67 பவுன் நகை-பணம் கொள்ளை


கோவை அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் 67 பவுன் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 15 April 2018 10:30 PM GMT (Updated: 2018-04-16T00:17:29+05:30)

கோவை அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் 67 பவுன் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

போத்தனூர்,

கோவையை அடுத்த வெள்ளலூர் எல்.ஜி.நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55), நிதிநிறுவன அதிபர். மேலும் இவர், அந்தப்பகுதியில் லேத் ஒர்க்‌ஷாப்பும் வைத்துள்ளார். இவருடைய மனைவி பிரேமலதா (52). இவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

ரவிச்சந்திரனின் மகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் சென்னையை சேர்ந்த வாலிபருடன் திரு மணம் முடிந்தது. மகளை, மருமகன் வீட்டில் கொண்டு போய் விட ரவிச்சந்திரன் முடிவு செய்தார். அப்போது தனது நகையை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறி ரவிச்சந்திரனிடம் நகையை அவருடைய மகள் கொடுத்துள்ளார்.

உடனே அவரும் தனது மகள் மற்றும் மனைவியின் நகைகளை வாங்கி பீரோவில் வைத்துள்ளார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு சென்றனர். இதையடுத்து ரவிச்சந்திரன், நேற்று முன்தினம் இரவு கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிப்பவர், ரவிச்சந்திரனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் நேற்று அதிகாலை தனது வீட்டிற்கு வந்தார்.

பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. அது போல் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களும் கீழே கிடந்தன. இதில், பீரோவில் வைத்து இருந்த 67 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் திருமணத்துக்கு பரிசாக வந்த வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை. அவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

இது குறித்து ரவிச்சந்திரன் போத்தனூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை தொடர்பான காட்சிகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அதுபோன்று மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு திரும்பியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.

இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கொள்ளை நடந்த வீட்டின் முன்புறம், பின்புறத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதால், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தனிநபர் அல்ல என்பதும், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் என்பதும் தெளிவாக தெரியவருகிறது. மேலும் அந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து, பழைய குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு வருகிறோம்.

ரவிச்சந்திரனின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். சில தடயங்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளதால், விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story