பவானிசாகர் அரசு பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை


பவானிசாகர் அரசு பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 April 2018 4:15 AM IST (Updated: 16 April 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அரசு பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பவானிசாகர்,

பவானிசாகர் பஸ் நிலையம் அருகே நகரின் மையப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை ஒட்டி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ரேஷன் கடை, மின்வாரிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், பஸ் நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. டாஸ்மாக் பகுதியில் மதுபிரியர்கள் நடமாட்டத்தால் அந்த வழியே செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அச்சப்படுகின்றன. இதனால் அவர்கள் வேறு வழியா செல்கின்றனர். மேலும் இந்த டாஸ்மாக் கடையில் பார் வசதி இல்லாததால் கடை முன்பு உள்ள சாலையில் மதுபிரியர்கள் குடிக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கி செல்பவர்கள் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தின் பின்புறம் உள்ள காலியிடத்தில் ஆங்காங்கே உட்கார்ந்து மது அருந்துகின்றனர். அவ்வாறு மது குடிப்பவர்கள் குடிபோதையில் அந்த பகுதி வழியாக வருவோர் போவோரிடம் தகராறில் ஈடுபடுகிறார்கள். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதன்காரணமாக இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர். எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவோர் குடித்து விட்டு போதையில் ஆங்காங்கே அரைகுறை ஆடை கலைந்த நிலையில் விழுந்து கிடக்கின்றனர். மேலும் இந்த டாஸ்மாக் கடை அருகில்தான் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. எனவே இந்த கடை வழியாக மாணவிகள் செல்ல முடியவில்லை.

மேலும் பெண்களும் இந்த கடை வழியாக செல்ல அச்சப்படுகிறார்கள். 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பவானிசாகர் அணைப்பூங்கா முன்புறம் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த டாஸ்மாக் கடையையும் அந்த பகுதிக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் டாஸ்மாக் கடை மாற்றப்படவில்லை. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு அரசு பள்ளிக்கூடம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவேண்டும்,’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story