அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களுடன் விவாதம்


அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களுடன் விவாதம்
x
தினத்தந்தி 15 April 2018 10:45 PM GMT (Updated: 15 April 2018 7:13 PM GMT)

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுடன் விவாதிக்கப்பட்டது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் குழுமூர் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நடேசன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரபாவதி, செந்துறை ஆணையர் நாராயணன், தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார்கள். ஊராட்சி செயலாளர் ரவி வரவேற்றார். இதில் அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

அதே போன்று நமங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு உதவி திட்ட அலுவலர் சந்தானகோபாலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிராம ஊராட்சி ஆணையர் ஜாகிர் உசேன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று அயன்தத்தனூர் ஊராட்சியிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து கிராம மக்களுடன் விவாதிக்கப்பட்டது. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள், வங்கி கணக்கு தொடங்குவது, 6 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பெண்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவது, திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் ஆண்டிமடம்் ஒன்றியம், காட்டாத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவி இயக்குனர் பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சமூக ஒற்றுமையினை மேம்படுத்துதல், பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின்கீழ் வீடு இல்லாதவர்கள் பயன் அடைய செய்தல், விவசாயிகளின் வருவாயினை பெருக்குதல், மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல், பொது சுகாதாரம் மற்றும் ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகிவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அம்பேத்கரின் சிந்தனை குறித்த கருத்து பட்டறை நடைபெற்றது. இருப்பிட சான்று, வருமான சான்று, சாதி சான்று பெறுதல் குறித்தும், மாணவர்களுக்கான உதவித்தொகை பெறுதல் குறித்தும், புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில், ஆண்டிமடம் தாசில்தார் ராஜமூர்த்தி, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story