கோவில் விழாவில் யானை தூக்கி வீசியதில் பெண் சாவு தும்பிக்கையை கும்பிட சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்


கோவில் விழாவில் யானை தூக்கி வீசியதில் பெண் சாவு தும்பிக்கையை கும்பிட சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
x
தினத்தந்தி 15 April 2018 11:15 PM GMT (Updated: 2018-04-16T00:50:55+05:30)

கோவில் விழாவில் யானை தூக்கி வீசியதில் பெண் பரிதாபமாக இறந்தார். தும்பிக்கையை கும்பிட சென்றவருக்கு இந்த துயரம் ஏற்பட்டது.

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி பத்திரகாளி (வயது 37). இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். பண்டிகை நாட்களில் கோவில்களுக்கு சென்று பூ வியாபாரம் செய்து வருவது வழக்கம். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவிலில் கொடை விழா நடந்தது. விழாவில் பூ வியாபாரம் செய்ய பத்திரகாளி வந்து இருந்தார்.

நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த யானையின் தும்பிக்கையை கும்பிடுவதற்காக பத்திரகாளி அருகில் சென்றதாக தெரிகிறது. அப்போது திடீரென்று அந்த யானை தும்பிக்கையால் பத்திரகாளியை தூக்கி வீசியது. இதனால் கோவில் வளாகத்தில் திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது. யானை தூக்கி வீசியதில் பத்திரகாளி பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பத்திரகாளி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து யானை பாகன் ராகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கோவில் விழாவில் யானை தூக்கி வீசியதில் பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story