மேற்கு மாம்பலத்தில் அழகு நிலையத்தில் கத்தி முனையில் கொள்ளை, 3 பேர் கைது


மேற்கு மாம்பலத்தில் அழகு நிலையத்தில் கத்தி முனையில் கொள்ளை, 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2018 3:30 AM IST (Updated: 16 April 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அழகு நிலையத்தில் கத்தி முனையில் பெண் ஊழியர்களை மிரட்டி ரொக்கப்பணம், செல்போன், நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் அழகு நிலையம் ஒன்று செயல்படுகிறது. அங்கு கோமதி (வயது 20) என்பவர் முக்கிய நிர்வாகியாக பணியாற்றுகிறார். கோமதியுடன் அபிஷா, செல்வி, அனுஸ்ரீ ஆகிய பெண் ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள்.

இந்த அழகு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வழக்கம்போல பணி நடந்தது. அப்போது 3 மர்ம வாலிபர்கள் கையில் கத்திகளுடன் அந்த அழகு நிலையத்திற்கு வந்தனர். அவர்களை பார்த்தவுடன் அங்கிருந்த பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வாலிபர்கள் பெண் ஊழியர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். பெண் ஊழியர்கள் பயந்து நடுங்கினார்கள். பெண் ஊழியர் ஒருவர் அணிந்திருந்த தங்க மோதிரம், 4 செல்போன்கள் மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணத்தை அந்த வாலிபர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கொள்ளையர்கள் 3 பேரும் அழகு நிலையத்திற்குள் நுழைந்ததும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவை செயல்படவிடாமல் அதன் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் அவர்களது உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை.

இருந்தாலும் அசோக்நகர் போலீசார் தீவிர தேடுதல்வேட்டை நடத்தி கொள்ளையர்கள் 3 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், தங்க மோதிரத்தை மீட்டனர். கைதானவர்கள் பெயர் சித்தார்த்தராஜ் (24), சம்சுஇம்மத் (23), சுதாகர் (26) என்று தெரிய வந்தது. சித்தார்த்தராஜ் பல்லாவரத்தைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள். 

Next Story