மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 April 2018 10:45 PM GMT (Updated: 15 April 2018 8:18 PM GMT)

காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பனப்பாக்கம்,

வாலாஜாவை அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 47), வாலாஜாவில் செல்போன் ‘ரீசார்ஜ்’ கடை வைத்துள்ளார். மேலும் இவர் பாரதீய ஜனதா கட்சியின் வாலாஜா ஒன்றிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் தேவன் (52), கட்டிட மேஸ்திரி.

நண்பர்களான இவர்கள் 2 பேரும், நேற்று முன்தினம் இரவு பாகவெளி கிராமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கோவில் திருவிழாவை காண மோட்டார் சைக்கிளில் சென்றனர். கோவில் திருவிழாவில் இரவு சமூக நாடகத்தை பார்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு 2 பேரும் பூண்டிக்கு வந்து கொண்டிருந்தனர்.

கார் மோதி 2 பேர் பலி

காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டியனும், தேவனும் படுகாயம் அடைந்தனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர். 

Next Story