சாலையையொட்டி அமைந்துள்ள தாமரை குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


சாலையையொட்டி அமைந்துள்ள தாமரை குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 April 2018 9:30 PM GMT (Updated: 15 April 2018 8:29 PM GMT)

சாலையையொட்டி அமைந்துள்ள தாமரை குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள குஞ்சலம் கிராம எல்லையில் தாமரை குளம் உள்ளது. சீதஞ்சேரி- நெல்வாய் சாலையையொட்டி அமைந்துள்ள இந்த தாமரை குளம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த தாமரை குளத்தை ஆங்கிலேயர்கள் 1930-ம் ஆண்டு கட்டினர். தாமரை குளம் தரை மட்டத்தில் சாலையையொட்டி உள்ளது.

இந்த குளத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. 6 மாதங்களுக்கு முன்னர் ஷேர் ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாமரை குளத்தில் கவிழ்ந்ததால் 7 பேர் காயம் அடைந்தனர். குளத்தில் தண்ணீர் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. 3 மாதங்களுக்கு முன்னர் டிராக் டர் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

4 மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் தற்போது தாமரை குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தாமரைகுளத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் குளத்தின் கரையில் புல் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, மாடுகள் தடுமாறி குளத்தில் விழுந்து விடுகின்றன.

இந்த குளத்தை சுற்றி சுற்றுச்வர் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். விரைவில் கோரிக்கை நிறைவேறுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story