காட்டு யானை தாக்கி பெண் சாவு ஆடு மேய்க்க சென்ற போது பரிதாபம்


காட்டு யானை தாக்கி பெண் சாவு ஆடு மேய்க்க சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 16 April 2018 4:30 AM IST (Updated: 16 April 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே ஆடு மேய்க்க சென்ற போது காட்டு யானை தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே கேரட்டி காப்புகாடு பக்கமுள்ளது ஏத்தகிணறு. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவன். இவரது மனைவி மாதம்மாள் (வயது 58). விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஆடு, மாடுகளை கெம்பகரை அருகே உள்ள தாளவாடிபள்ளம் என்ற இடம் அருகில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் அங்கு யானைகள் வந்தன. இதை பார்த்த மாதம்மாள் அங்கிருந்து தப்ப முயன்றார். அப்போது ஒரு யானை மாதம்மாளை துதிக்கையால் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.

வனத்துறையினர் ஆறுதல்

இதனிடையே அந்த வழியாக ஆடு, மாடுகளை மேய்க்க சென்றவர்கள் யானை தாக்கி மாதம்மாள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, அஞ்செட்டி வனச்சரகர் தனபால் மற்றும் வனத்துறையினர், அஞ்செட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் யானை தாக்கி பலியான மாதம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான மாதம்மாளின் குடும்பத்திற்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவித் தொகையை பெற்று தருவதாக தெரிவித்தனர். யானை தாக்கி பெண் இறந்த தகவல் அறிந்ததும் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தாசில்தார் மணிமொழி ஆகியோர் நேரில் சென்று சீஞ்சீவன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.


Next Story