ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது நானும், எஸ்.பி.வேலுமணியும் உடன் இருந்ததாக கூறுவது தவறான தகவல்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, நானும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உடன் இருந்ததாக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் கூறுவது தவறான தகவல் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, நானும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உடன் இருந்ததாக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் கூறுவது தவறான தகவல் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
அமைச்சர் தங்கமணி பேட்டி
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோடை காலத்தில் மின் தேவை 16 ஆயிரம் மெகா வாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் உள்ளது. கோடைகாலம் மட்டுமல்லாமல், எந்த காலத்திற்கும், எவ்வளவு மின் தேவை அதிகரித்தாலும், அதை ஈடுசெய்ய மின் வாரியம் தயாராக இருக்கிறது. அதனால் தமிழகத்தில் இனி மின்வெட்டே ஏற்படாது.
தவறான தகவல்
ஜெயலலிதா மறைவின் போது தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன்ராவ், தற்போது விசாரணை ஆணையத்தில் எங்கள் மீது வேண்டும் என்றே குற்றம் சாட்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. அவர் யாரையோ திருப்திப்படுத்த தவறான தகவலை கூறுகிறார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்ல நாங்கள், அப்போது தலைமை செயலாளராக இருந்த ராமமோகன் ராவிடம் பலமுறை கேட்டோம். அவ்வாறு கேட்டபோது, கேட்டு சொல்வதாக கூறிய அவர், பதில் சொல்லவில்லை. மாறாக தற்போது அமைச்சர்கள் பதில் சொல்லவில்லை எனக்கூறி வருகிறார்.
1½ ஆண்டுகளுக்கு பிறகு
ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையை அவர் அப்போதே வெளியிட்டு இருக்கலாம். ஆனால் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாறு அவர் சொல்ல என்ன நிர்ப்பந்தம் என்பது தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, நானும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் அவருடன் இருந்ததாக ராம மோகன்ராவ் கூறுவது தவறாகும்.
அப்போது நான் ஆர்.புதுப்பட்டி கோவிலில் ஜெயலலிதா நலம் பெற வேண்டி யாகம் நடத்தி கொண்டு இருந்தேன். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருவனந்தபுரத்துக்கு அரசு பணிக்காக சென்று இருந்தார். உயர் அதிகாரியான அவர் எப்படி இவ்வாறு சொன்னார் என்று தெரியவில்லை.
அரசியல் ஆதாயம்
கடந்த 2007-ம் ஆண்டில் ஆட்சி செய்த தி.மு.க. அப்போதே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தபோது, அரசிதழில் தீர்ப்பை வெளியிட நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அந்த ஆண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திருக்கும். ஆனால் அரசியல் ஆதாயம் தேடவே தி.மு.க. தற்போது பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
நீரா பானம் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். அதேவேளையில், டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு படிப்படியாக குறைக்கும்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.
Related Tags :
Next Story