அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும், பெற்றோர் சங்கம் கோரிக்கை


அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும், பெற்றோர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 15 April 2018 10:30 PM GMT (Updated: 15 April 2018 9:13 PM GMT)

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 4 மாத நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும் என்று பெற்றோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காரைக்கால்,

காரைக்கால் அரசு உதவிபெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் வின்சென்ட், செயலாளர் மணவாளன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் 19 அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகள் பெயர் அளவில்தான் அரசு உதவிபெறும் பள்ளிகளாக உள்ளன. ஏனென்றால் அரசு பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு முழுமையாக வழங்குவதில்லை. இது தொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அரசு பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், காரைக்காலில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச பாடநூல், நோட் புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. பிற சலுகைகள் வழங்கப்படுவதில்லை. இனிவரும் காலங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனைத்து சலுகைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 140-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்குவதில்லை. இவர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை மற்றும் நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை விரைவில் வழங்கவேண்டும். ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story