என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு


என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 April 2018 4:15 AM IST (Updated: 16 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை அவ்வை நகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன். இவர் புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் முதல்வராக உள்ளார். இவருடைய மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவர், புதுவைக்கு வந்திருந்தார்.

தனஞ்செயன் மகன் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வெளிநாட்டிற்கு புறப்பட்டார். அதற்காக தனஞ் செயன் குடும்பத்தாருடன் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு காரில் சென்றார். அங்கு அவருடைய மகனை விமானத்தில் ஏற்றிவிட்டு மீண்டும் புதுவைக்கு நேற்று காலை திரும்பினார்கள்.

புதுவையில் வீட்டிற்கு வந்தவுடன் தனஞ்செயன் குடும்பத்தாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் நாலாபுறமும் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருடிச் செல்லப்பட்டிருந்தன.

இதுகுறித்து தனஞ்செயன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதேபோல் தடயவியல் நிபுணர் களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. நாய் சிறிது தூரம் மோப்பம் பிடித்தப்படி சென்றது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த துணிகர திருட்டு குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் குற்றவாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story