திண்டுக்கல் அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த புதிர் கல்வெட்டு கண்டுபிடிப்பு


திண்டுக்கல் அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த புதிர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 15 April 2018 10:00 PM GMT (Updated: 15 April 2018 9:41 PM GMT)

திண்டுக்கல் அருகே, 18-ம் நூற்றாண்டை சேர்ந்த புதிர் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திண்டுக்கல்,


திண்டுக்கல் அருகே உள்ள தருமத்துப்பட்டியில் தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி மற்றும் ஜெரால்டு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்த பலகை வடிவிலான கல்லை அவர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அந்த கல், கி.பி. 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கி.பி. 18-ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த கல்லில் 4 கட்டங்களும், முழுமைபெறாத ஒரு கட்டமும் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. கையை எடுக்காமலும், வரைந்த கோட்டின் மீது வரையாமலும் இன்றைய காலத்தில் விளையாடும் புதிர் விளையாட்டை போல இந்த கல்வெட்டு அமைந்துள்ளது. இதனை தருமத்துப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் துணி துவைக்க பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த கல்வெட்டின் மேல் பகுதியில் ஒரு சிறிய வட்டமும், ‘ட’ வடிவில் 2 கோடுகளும் வரையப்பட்டுள்ளன. அந்த கட்டத்துக்குள் கி.பி. 18-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்துக்களை முழுமையாக உருவாக்க முடிகிறது. அதன்படி தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் என 247 எழுத்து வடிவங்களையும் இந்த புதிர் கல்வெட்டில் முழுமையாக உருவாக்க முடிகிறது.

மேலும், ஒன்றில் இருந்து பல கோடிக்கும் அதிகமான முடிவில்லாத தமிழ் எண்களையும் இதில் உருவாக்க முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். இதனை உருவாக்குவதில் சிரமம் இருந்தால், கல்வெட்டின் மேல் பகுதியில் உள்ள 3 குறியீடுகளை பயன்படுத்தி எழுத்துக்களையும், எண்களையும் எளிதில் உருவாக்க முடியும். அகத்தியர் தன்னுடைய கமண்டத்தில் (குவளை) காவிரி ஆற்றை அடக்கியதாக புராண கதையில் கூறியுள்ளதற்கு இணையாக, 18-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ்மொழியின் எழுத்து வடிவங்களையும், எண்களையும் மிகச்சிறிய கட்டத்துக்குள் அடக்கியுள்ளனர். இதில் இருந்து நம் முன்னோர்களின் அறிவு கூர்மையை தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த புதிர் கல்வெட்டை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story