பிரேக் பிடிக்காததால் விபத்து: மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து பெண் பலி, 72 பயணிகள் காயம்


பிரேக் பிடிக்காததால் விபத்து: மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து பெண் பலி, 72 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 15 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-16T03:11:24+05:30)

கன்னிவாடி அருகே, பிரேக் பிடிக்காததால் மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். 72 பயணிகள் காயம் அடைந்தனர்.

கன்னிவாடி, 

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சோலைக்காடு மலைக்கிராமம் உள்ளது. சோலைக்காட்டில் இருந்து நேற்று மாலை ஒரு அரசு பஸ் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த வழித்தடத்தில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததால், கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.

அதன்படி நேற்றும் வழக்கம் போல அந்த பஸ்சில் கூட்டம் அலைமோதியது. பஸ்சில் சிறுவர்-சிறுமிகள் என மொத்தம் 145 பேர் பயணம் செய்தனர். இதில் 31 பேர் மேற்கூரையில் அமர்ந்திருந்தனர். அந்த பஸ்சை, திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) ஓட்டினார். பன்றிமலை அருகே ரெட்டறைபாறை என்னுமிடத்தில் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது, திடீரென பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதையில் இருந்த பாறையில் மோதி சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.

பயணிகளின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த ரெட்டறைபாறை, சோலைக்காடு, ஆடலூர் மலைக்கிராம மக்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார், கன்னிவாடி இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் சுபகுமார் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மலைக்கிராம மக்களுடன் சேர்ந்து பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பழைய கன்னிவாடியை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி ஜெயக்கொடி (45) சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும், காராமடையை சேர்ந்த குழந்தைராசு, தர்மத்துப்பட்டியை சேர்ந்த ரெங்கநாயகி, பார்வதி, மேரி, அற்புதமேரி, செல்வி, முருகானந்தம்மாள் மற்றும் பஸ் டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் தங்கபெருமாள் உள்பட 72 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று இரவு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story