2 தொகுதிகளில் போட்டியிடும் கோரிக்கையை ராகுல்காந்தி நிராகரிப்பு சாமுண்டீஸ்வரியில் மட்டுமே சித்தராமையா போட்டி
2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருந்த முதல்- மந்திரி சித்தராமையாவின் கோரிக்கையை ராகுல்காந்தி நிராகரித்தார். இதனால் சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமே அவர் போட்டியிட உள்ளார்.
பெங்களூரு,
2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருந்த முதல்- மந்திரி சித்தராமையாவின் கோரிக்கையை ராகுல்காந்தி நிராகரித்தார். இதனால் சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமே அவர் போட்டியிட உள்ளார்.
2 தொகுதிகளில் போட்டியிட முடிவு
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா, மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்தார். ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்தது. இதையடுத்து, சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும் போட்டியிட முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்தார்.
சித்தராமையாவின் முடிவுக்கு ஆரம்பத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் முதல்-மந்திரி சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்ததால், மாநில தலைவர் பரமேஸ்வரும் 2 தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கட்சி மேலிட தலைவர்களிடம் கோரிக்கை வைத்தார். அத்துடன் முதல்-மந்திரி சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட அனுமதி அளிக்கக்கூடாது என்று மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராகுல்காந்தி நிராகரித்தார்
அதே நேரத்தில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டால் சித்தராமையா தோல்வி அடைந்து விடுவார் என்ற பயத்தில் பாதாமியிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறி பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கடுமையாக தாக்கி பேசி வருகின்றன. மேலும் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட்டால், அதனையே காரணம் காட்டி பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் பிரசாரம் செய்வார்கள் என்றும், இது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கருதினார்கள்.
இதையடுத்து, முதல்-மந்திரி சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடும் முடிவை ராகுல்காந்தி நிராகரித்துள்ளார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டும் போட்டியிடுமாறு சித்தராமையாவிடம் ராகுல்காந்தி தெரிவித்திருப்பதாக தெரிகிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமே முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story