வேலை மாற்றத்திற்கு தயாராகும்போது கவனிக்க வேண்டியவை...
நீங்களாக வேலை மாறத் தயாரானும், திடீர் சூழலால் வேலை பறிபோனாலும் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொண்டு பணி மாற வேண்டும்.
இருக்கும் வேலையை இழக்கும்போது மனதில் கோபம், எரிச்சல், இயலாமை, எதிகாலம் பற்றிய பயம் என பல உணர்வுகள் மனதை அரிக்கும். அடுத்து என்ன செய்வது, எங்கு வேலை பார்ப்பது என்ற கேள்விகளும் தடுமாற்றம் தரும். நீங்களாக வேலை மாறத் தயாரானும், திடீர் சூழலால் வேலை பறிபோனாலும் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொண்டு பணி மாற வேண்டும். அந்த விஷயங்கள் இதோ...
திடீர் முடிவா? எதிர்பார்த்ததா?
வேலைவாய்பு உலகத்தை நன்கு கவனிப்பவர்களுக்கு வேலைபறிபோக வாய்ப்பு குறைவு. இன்றைய மாற்றங்களையும், நாளைய தேவைகளையும் அறிபவர்கள் அதற்கேற்ப திறமையை வளர்த்துக் கொண்டு, வேலையில் நிரந்தரமாக நீடிப்பார்கள். தாங்கள் இருக்கும் துறையில் உச்சம் தொடுவார்கள். வேலை இழப்பு என்பது நமது துறையை பாதிக்கலாம் என்ற சூழல் நிலவுவதை நீங்கள் முன்கூட்டியே கணித்தால் அதற்கேற்ப பாதுகாப்பு வழிகளை செய்திருக்கலாம். நீங்கள் வேலையை இழப்பது உங்களுக்கு தெரிந்து நடந்த ஒன்றா? அல்லது எதிர்பாராமல் நடந்த நிறுவனத்தின் தடாலடி முடிவா? என்பதை சிந்தியுங்கள். எதிர்பாராத ஒன்று ஒன்றால் நீங்கள் இன்னும் உங்கள் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதிர்பார்த்த ஒன்றுதான் என்றால் நீங்கள் அடுத்த வேலைக்கான ஆயத்தைப் பணிகளையும் ஏற்கனவே செய்து வந்திருப்பீர்கள் இல்லையா?
நம்பிக்கையை இழக்காதீர்கள் :
வேலையை இழப்பதால் நம்பிக்கையை இழக்க வேண்டாம். உங்களிடம் அடுத்த வேலையைப் பெறுவதற்கான அனுபவமும், திறமையும் நிரம்பவே இருக்கின்றன என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். இதைவிட சிறந்த நிறுவனத்திற்கும், உயர்ந்த பதவிக்கும் செல்வோம் என்ற நம்பிக்கையுடன் பணித் தேடலை தொடங்குங்கள்.
திறமை தேவையா?
வேலையை இழந்ததற்கு என்ன காரணம்? என்பதை அலசி ஆராயுங்கள். உங்கள் துறையில் ஏற்பட்ட சரிவா? நிறுவனம் போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் இந்த முடிவை அறிவித்ததா? அல்லது தவறான நடத்தைகள் மற்றும் திறமை குறைவு இருப்பதாக உங்கள் வேலை பறிக்கப்பட்டதா? என்பதை யோசியுங்கள். தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். தகுதிகளை உயர்த்திக் கொள்ளுங்கள். தேவையான தகுதியைப் பெறுவதற்கு சிறிது காலத்தை அர்ப்பணியுங்கள். அதற்கான சிரமங்களையும் தாங்கிக் கொள்ளுங்கள். இனி இப்படியொரு சூழல் ஏற்படக்கூடாது என்ற உத்வேகத்துடன் அனைத்து திறன்களையும் வளர்த்துக் கொண்டு, உங்கள் துறையில் உயர்வு காணுங்கள்.
நட்பு பொழுதுபோக்கிற்காக அல்ல...
வள்ளுவரின் வாக்குபோல, இன்னல் மிகுந்த இந்த சூழலை எதிர்கொள்ள நட்பின் உதவியை நாடுங்கள். பொழுதுபோக்குவதற்கு மட்டுமல்லாமல் நண்பர்கள் அனைவருக்கும் நீங்கள் வேலை தேடுவதை அறிவியுங்கள். சமூக வலைத்தளத்திலும், வேலைவாய்ப்பு தளங்களிலும் உங்கள் திறமைகளை பதிவு செய்து பணி அழைப்பை எதிர்பாருங்கள். குறிப்பிட்ட அறிவிப்புகளுக்காக காத்திருக்காமல், அனைத்து வழிகளிலும் பணித் தேடலை முடுக்கிவிடுங்கள்.
நிதானமான தேர்வு:
அடுத்த வேலை தேடும்போது நிதானம் தேவை. வேலை இழந்ததால் பொருளாதார சூழல் இடையூறு தந்தாலும், புதிய வேலை கிடைக்க கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டாலும் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். அடுத்த வேலையிலும் இதுபோன்ற தடைகள் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக பொருந்தா வேலைக்குச் சென்றுவிட்டு கால விரயம் செய்து கொண்டிருக்க வேண்டாம். சிறிது காலம் எடுத்துக் கொண்டாலும் அவசியமான திறமைகளை வளர்த்துக் கொண்டு, நீங்கள் நினைத்த, நிரந்தரமான வாய்ப்புகள் கொண்ட பணிக்குச் செல்லுங்கள்.
புதியவராக செல்லுங்கள்
புதிய வேலைக்கு புதியவராகச் செல்லுங்கள். பழைய பணியில் ஏற்பட்ட தவறுகள் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். செல்லும் வேலைக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். மற்றவர் மத்தியிலும் உங்கள் தகுதியை உயர்த்தும்படியான நடவடிக்கைகளில், செயல்களில் ஈடுபடுங்கள். பொறுப்புணர்ந்த செயல்கள் என்றும் தோல்வியைத் தருவதில்லை. தகுதியை உயர்த்தி தலைநிமிர்ந்து நிற்போம்! வாழ்த்துக்கள்!
Related Tags :
Next Story