மற்றுமொரு பெருவெடிப்பில் உலகம் அழியுமா?


மற்றுமொரு பெருவெடிப்பில் உலகம் அழியுமா?
x
தினத்தந்தி 16 April 2018 9:44 AM GMT (Updated: 2018-04-16T15:14:36+05:30)

நம் பிரபஞ்சம் ஒரு பெருவெடிப்பில் தோன்றியது போல, அதேமாதிரியான ‘ஒரு பெருவெடிப்பில் அழியும்’ என்று கணித்துள்ளனர்.

மக்கு என்ன வயதாகிறது என்று ஒவ்வொரு வருடமும் வந்துபோகும் நம் பிறந்தநாள் நினைவுபடுத்திவிட்டுச் செல்லும். ஆனால், நம்மைத் தாங்கிநிற்கும் நம் பூமியுடன், சூரியன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மற்றும் நம் பால்வீதி விண்மீன் மண்டலம் போன்ற பல விண்மீன் மண்டலங்களையும் கொண்ட நம் பிரபஞ்சத்துக்கு என்ன வயதாகிறது என்று பார்த்தால் சுமார் 1400 கோடி ஆண்டுகள்.

அதாவது, சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம் பிரபஞ்சமானது அதீத வெப்பம், அடர்த்தி மற்றும் அழுத்தம் கொண்ட ஒரு பந்துபோல இருந்ததாகவும், அழுத்தம் தாங்காமல் அது திடீரென்று வெடித்துச் சிதறியதாகவும் கருதப்படுகிறது. இதுவே பெருவெடிப்பு (Big Bang Theory) என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. நம் பிரபஞ்சத்தின் பரிணாமத்துக்கும், உயிர்களின் தோற்றத்துக்கும் இந்த பெருவெடிப்பே காரணம் என்றும் பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

1400 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பெருவெடிப்பைத் தொடர்ந்து நம் பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் பிரபஞ்சம் ஒரு பெருவெடிப்பில் தோன்றியது போல, அதேமாதிரியான ‘ஒரு பெருவெடிப்பில் அழியும்’ என்று கணித்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக இயற்பியலாளர்கள் மேற்கொண்ட ஒரு சமீபத்திய ஆய்வு.

பிற துகள்களுக்கு எடையைக் கொடுக்கக்கூடிய மிகச் சிறிய குவாண்டம் துகளான ஹிக்ஸ் போசான் (Higgs boson)-ன் நிலைப்புத்தன்மை நீக்கப்படுவதால் ஆற்றல் வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, அந்த வெடிப்பில் நம் பிரபஞ்சமும் விழுங்கப்படும் என்றும், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றின் விதிகள் அனைத்தும் தலைகீழாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். முக்கியமாக, இந்த ஆய்வில், நம் பிரபஞ்சம் எப்போது அழியும் என்பதையும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயையோ, அப்படியா? என்று பதறாதீர்கள். ஏனெனில், இன்றிலிருந்து 10139 வருடங்களுக்குப் பிறகுதான் அந்த பெருவெடிப்பு ஏற்படும் என்று கணித்துள்ளனர். அதாவது, பத்துக்குப் பிறகு 139 பூஜ்ஜியங்கள் போட்டுக்கொள்ளுங்கள்.

அல்லது குறைந்தபட்சம் 1058 வருடங்களில் உலக அழிவை ஏற்படுத்தும் பெருவெடிப்பு ஒன்று ஏற்படும் என்று 95 சதவீதம் உறுதியாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

உலகை அழித்துவிடக்கூடிய இந்த பெருவெடிப்புக்கு காரணமாக இருக்கக்கூடியதாகக் கூறப்படும் ‘ஹிக்ஸ் போசான்’ என்பது கடந்த 2012-ம் வருடம் லார்ஜ் ஹெட்ரான் கொல்லைடர் (Large Hadron Collider) எனும் எந்திரத்தில் அணுவக புரோட்டான்களை ஒன்றோடு ஒன்று மோதச்செய்து அதன் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட, குறிப்பிட்ட எடைகொண்ட ஒரு மிகச்சிறிய குவாண்டம் துகள் ஆகும்.

இந்த புதிய ஆய்வின் முடிவுகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஹிக்ஸ் போசானின் எடை மாறக்கூடும் என்றும், அதன் விளைவாக உயிர்கள் உருவாகக் காரணமாக இருக்கும் தனிமங்கள் உடைக்கப்பட்டு, இயற்பியலின் விதிகள் மீறப்படும் என்றும் கருதப்படுகிறது.

முக்கியமாக, இயற்கையாக பல்லாயிரம் கோடி ஆண்டுகள் மிகமிகத் தாமதமாக தொடர்ந்து எரியக் கூடிய ஹிக்ஸ் போசான், தன் நிலைப்புத்தன்மையை இழந்துவிடும்போது நம் பிரபஞ்சத்தை உருவாக்கிய பெருவெடிப்பு போன்றதொரு மிகப்பெரிய வெடிப்பினை திடீரென்று உருவாக்கி அதன்மூலமாக பிரபஞ்சம் அழியக்கூடும் என்று கூறப்படுகிறது.

நிலைப்புத்தன்மை இழந்த ஒரு ஹிக்ஸ் போசான் (destabilized higgs boson) துகள் மூலமாக ஏற்படும் பிரபஞ்ச அழிவானது, பிரபஞ்சத்தின் ஆழத்தில் உள்ள ஒரு கருந்துகளை ஒட்டிய பிரபஞ்ச பகுதியிலுள்ள கால வெளியில் ஏற்படும் வளைவு காரணமாக ஏற்படக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதீத அடர்த்திகொண்ட பொருட்களில் ஒன்றான, ஒரு கருந்துகளை ஒட்டிய கால வெளியானது வளையும்போது, இயற்பியலின் விதிகள் அனைத்தும் கட்டுப்பாடுகளை இழந்துவிடுகின்றன என்றும், அதன் காரணமாக பிரபஞ்சத்தின் துகள்கள் அனைத்தும் கற்பனைக்கு எட்டாத பல வழிகளில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதால் பெருவெடிப்பு ஒன்று ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக, அத்தகைய பெருவெடிப்பு ஒன்று ஏற்கனவே தொடங்கியிருக்கலாம் என்றும், அப்படி அது தொடங்கியிருந்தால், அது குறித்த அறிகுறிகளை நாம் அறிந்துகொள்ள வழியேதுமில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில், பிரபஞ்ச அழிவை ஏற்படுத்தும் அந்த நிலைப்புத்தன்மை இழந்த ஹிக்ஸ் போசான் துகள் இருக்கும் தூரமானது நம் தொழில்நுட்ப கருவிகளால் கண்டறிய முடியாத அளவு மிகத்தொலைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில், 1400 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பெருவெடிப்பில் நமது பிரபஞ்சத்தின் ஜனனம் என்றால் இனி நிகழப்போகும் மற்றொன்றில் அதன் மரணம் என்கிறது இந்த புதிய ஆய்வு. 

Next Story