புதிய மூளை ஸ்டெம் செல் கண்டுபிடிப்பு


புதிய மூளை ஸ்டெம் செல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 16 April 2018 3:17 PM IST (Updated: 16 April 2018 3:17 PM IST)
t-max-icont-min-icon

நம் உடலில் பல்வேறு வகையான புதிய ஸ்டெம் செல்கள் தொடர்ந்து கண்டறியப்பட்ட வண்ணமாய் இருக்கின்றன.

‘கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்’ எனும் சொல்லாடலை நம்மில் பலரும் கேட்டிருப்போம்.

ஒரு வகையில் பார்த்தால் நம் உடலில் உள்ள பல்வேறு வகையான ஸ்டெம் செல்களும் மேலே உள்ள சொல்லாடலில் வரும் வெண்ணையைப் போன்றதுதான்.

ஏனென்றால், நம் இதயத்தை செயலிழக்கச் செய்து உயிர் பலி வாங்கும் மாரடைப்பு, நினைவுத் திறனை குறைக்கும் ‘டிமென்ஷியா’ உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கான சிகிச்சைகளை (நெய் என்று வைத்துக்கொண்டால்) நம் உடலிலுள்ள ஸ்டெம் செல்களைக் (வெண்ணெய்) கொண்டு உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதை எண்ணற்ற மருத்துவ ஆய்வுகள் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றன.

உதாரணமாக, குழந்தைப் பிறப்பின்போது அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல் குறைபாடுகளுக்கான மருந்தாகும் அல்லது சிகிச்சையாக மாறக்கூடிய குழந்தையின் ஸ்டெம் செல்களை சேமித்து வைக்கும் பழக்கம் கடந்த பல வருடங்களாக பொதுமக்களிடையே அதிகரித்து வருவதைக் குறிப்பிடலாம்.

உடலுக்குள் இருக்கும் உயிரணு, அட்சயப்பாத்திரம் என்று சொல்லுமளவுக்கு மகத்துவம் வாய்ந்த பல்வேறு வகையான புதிய ஸ்டெம் செல்கள் தொடர்ந்து கண்டறியப்பட்ட வண்ணமாய் இருக்கின்றன.

அந்த வரிசையில், மூளையை பாதிக்கும் அல்செய்மர்ஸ் போன்ற குறைபாடுகளை, மூளையானது தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கக்கூடிய ஒரு புதிய மூளை ஸ்டெம் செல்லை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

‘ஜி 2 கொயசன்ட் ஸ்டெம் செல்’ (G2 quiescent stem cell) என்று அழைக்கப்படும் இந்த புதிய ஸ்டெம் செல் மூளைக்குள் உறங்கிக்கொண்டு இருக்கும் பல்வேறு ஸ்டெம் செல்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட ஸ்டெம் செல்களுடன் ஒப்பிடுகையில் ஜி 2 கொயசன்ட் ஸ்டெம் செல்களின் மீளாக்கத்திறன் மிகவும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதனால், அடிப்படையில் மிகவும் குறைவான செப்பனிடுதல் திறன்கொண்ட மூளையின் மறுவளர்ச்சிக்கு ஜி2 கொயசன்ட் ஸ்டெம் செல்கள் பெரிதும் உதவக்கூடும் என்கிறார் இதனைக் கண்டறிந்த ஆய்வாளர்களுள் ஒருவரான ஆண்ட்ரியா பிராண்ட்.

இயற்கையாக உறங்கும் நிலையில் இருக்கக்கூடிய ஜி2 கொயசன்ட் ஸ்டெம் செல்களை தூண்டிவிட்டால் மூளையின் குறிப்பிட்ட வகை செல்களான கிளியல் செல்களை (Glia cells) உற்பத்தி செய்யும் திறன் இவற்றிற்கு உண்டு என்கிறார் ஆண்ட்ரியா.

வரலாற்று சிறப்புமிக்க மற்றும் மனிதர்களுடன் சுமார் 60 சதவீதம் டி.என்.ஏ/மரபுப்பொருள் ஒற்றுமை கொண்ட ஆய்வு உயிரினமான பழப்பூச்சி (Drosophila or small fruit fly) மீதான சமீபத்திய ஆய்வில், ட்ரிபுள்ஸ் (tribbles) எனும் ஒரு மரபணுவானது ஸ்டெம் செல்லாக மாறும் திறன்கொண்ட ஜி 2 உயிரணுக்களை உறக்க நிலையில் வைத்து பராமரிக்கிறது என்று கண்டறியப்பட்டது.

இதே மரபணு மனிதர்களிலும் இருப்பதால், மனிதர்களின் ட்ரிபுள்ஸ் மரபணுவை செயலிழக்கச்செய்யும் மருந்துகளை உருவாக்கினால், மனிதர்களின் ஜி 2 கொயசன்ட் ஸ்டெம் செல்களின் உற்பத்தியை தூண்டிவிட முடியும் என்கிறார் ஆய்வாளர் லியோ ஓட்சுகி. அத்தகைய ஒரு முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் மனித மூளையை பாதிக்கும் ஆபத்தான நோய்களான பார்கின்சன்ஸ் மற்றும் ஹண்டிங்டன் போன்றவற்றிற்கு சிகிச்சைகளை உருவாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

இதே வகையான ஸ்டெம் செல்கள் மூளை மட்டுமல்லாமல் உடலின் பிற பாகங்களிலும் இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனால், ஜி 2 கொயசன்ட் ஸ்டெம் செல்களை கட்டுப்படுத்தும் ரசாயன சமிக்ஞை (கெமிக்கல் சிக்னல்) வழித்தடம் அல்லது உயிரியல் சமிக்ஞை (பயாலஜிக்கல் சிக்னல்) வலையமைப்பை கண்டுபிடித்து அதனை நம் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்தும் வசதியை ஏற்படுத்திவிட்டால், உடலின் பல்வேறு பாகங்களை பாதிக்கக்கூடிய நோய்களுக்கான சிகிச்சைகளை உருவாக்க முடியும் என்கின்றனர் இதனைக் கண்டறிந்துள்ள ஆய்வுக்குழுவினர். 

Next Story