காவிரி மேலாண்மை வாரியம் கோரி தபால் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம்; 29 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் கோரி தபால் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம்; 29 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2018 11:00 PM GMT (Updated: 2018-04-17T01:18:27+05:30)

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தபால் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து மதுரை தல்லாகுளம் தபால் அலுவலகத்தை இழுத்து பூட்டும் போராட்டம் நடத்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ்தேச மக்கள் முன்னணி, இந்திய தேசிய லீக், ஆதிதமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

எனவே தபால் அலுவலகத்தை சுற்றிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். அலுவலகத்திற்குள் செல்லும் பொதுமக்கள் அனைவரும் கடும் விசாரணைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த சாகுல் அமீது, தமிழ்தேச மக்கள் முன்னணியை சேர்ந்த பாண்டியன், தங்கபாண்டியன், பிரகாசம், திராவிடர் விடுதலை கழக மணியமுதன் உள்பட 35-க்கும் மேற்பட்டவர்கள் கூடினர்.

அவர்கள் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க கோரியும் கோஷம் போட்டனர். பின்னர் அவர்கள் தபால் அலுவலகத்தை இழுத்து பூட்டு போட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை உள்ளே விட மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story