ஓரியூரில் அரசு பழத்தோட்டத்துக்குள் புகுந்து பெண்கள் திடீர் தர்ணா, பொங்கல் வைத்து போராட்டம்


ஓரியூரில் அரசு பழத்தோட்டத்துக்குள் புகுந்து பெண்கள் திடீர் தர்ணா, பொங்கல் வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 17 April 2018 3:30 AM IST (Updated: 17 April 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகா ஓரியூர் அரசு பழத்தோட்டத்துக்குள் புகுந்து பெண்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டு பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டி,

திருவாடானையில் தாலுகா ஓரியூர் திட்டை பகுதியில் அரசு பழத்தோட்டம் அமைத்து வருகிறது. இந்த பழத்தோட்டத்திற்கு ஓரியூர் திட்டை கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலம், ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு, வழிபாட்டு தலம் போன்றவற்றை அரசு கையகப்படுத்தி உள்ளதாகவும் அதனை கிராம மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென ஓரியூர் அரசு பழத்தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் பழத்தோட்டத்திற்குள் உள்ள வழிபாட்டு தலம் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவாடானை தாசில்தார் சாந்தி, புல்லூர் வருவாய் ஆய்வாளர் சாரதா, கிராம நிர்வாக அலுவலர் சேக்ரட்நாத், போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பொதுமக்கள் யாரும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. இதனால் அதிகாரிகள் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த பெண்கள் அனைவரும் அங்குள்ள குருசடி வழிபாட்டு தலம் அருகில் பொங்கல் வைத்து சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதுகுறித்து கிராம மக்கள், கிராமிய மகளிர் மேம்பாட்டு அமைப்பினர் கூறியதாவது:- ஓரியூர் கிராமத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளது. கிணறுகள் அனைத்தும் வறண்டு போய்விட்டன. தொடர்ந்து 2 ஆண்டுகளாக மழை இல்லாமல் வறட்சி நிலை ஏற்பட்டுஉள்ளதால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஓரியூர் கிராம மக்களின் குடிநீர் தேவையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓரியூர் திட்டை கிராம ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு, குருசடி புனித வழிபாட்டுதலம், விளைநிலங்களுக்கு செல்லும் பாதையை பழத்தோட்டம் அமைக்க கையகப்படுத்தி அடைத்து உள்ளனர். எனவே இங்கு மக்கள் வந்து செல்ல சாலை வசதியும், குருசடியில் வழிபட தேவையான வசதியும், பழத்தோட்டத்திற்கு போடப்பட்டுள்ள ஆழ்குழாய் மூலம் ஓரியூர் திட்டை கிராமத்திற்கு குடிநீரும் வழங்க வேண்டும். அதிகாரிகள் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story