ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ரூ.52 லட்சம் மோசடி, பெண் உள்பட 2 பேர் கைது


ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ரூ.52 லட்சம் மோசடி, பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 April 2018 3:30 AM IST (Updated: 17 April 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ரூ.52½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

காளையார்கோவில் தென்றல் நகரை சேர்ந்தவர் சாரதா. இவரிடம், இளையான்குடி அருகே உள்ள அண்டக்குடி, ஏ.புதூரைச் சேர்ந்த தனசெல்வி(வயது 39), வாணி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி(40) ஆகிய 2 பேர் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்துவதாக கூறியுள்ளனர். பின்னர் இந்த ஏலச்சீட்டிற்கு ஆள்பிடித்து கொடுத்தால் அதற்கு தனியாக கமிஷன் பணம் தருவதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய சாரதா தனக்கு தெரிந்த 12 பேரிடம் இருந்து கடந்த ஒரு ஆண்டில் ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் வரை வசூலித்துள்ளார். பின்னர் அந்த பணத்தை தனசெல்வி, ஆரோக்கியசாமியிடம் சாரதா கொடுத்துள்ளார்.

ஆனால் பணத்தை பெற்று கொண்ட தனசெல்வியும், ஆரோக்கியசாமியும் ஏற்கனவே கூறியபடி சாரதாவிற்கு கமிஷன் தொகையை கொடுக்கவில்லை. கமிஷன் தொகை குறித்து கேட்டபோது 2 பேரும் பதில் ஏதும் கூறாமல் இருந்துவந்துள்ளனர். இதனால் வசூலித்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சாரதா கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணம் தரமறுத்ததுடன் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மோசடி செய்யப்பட்டதை அறிந்த சாரதா அதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார்.

அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தனசெல்வியையும், ஆரோக்கியசாமியையும் கைதுசெய்தார். 

Next Story