ரெயில்வே மேம்பால பணிக்காக மானாமதுரை பைபாஸ் ரோட்டில் இ-கேட் அமைப்பு


ரெயில்வே மேம்பால பணிக்காக மானாமதுரை பைபாஸ் ரோட்டில் இ-கேட் அமைப்பு
x
தினத்தந்தி 16 April 2018 10:15 PM GMT (Updated: 2018-04-17T01:19:35+05:30)

மானாமதுரை பைபாஸ் ரோட்டில் இ-கேட் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அனைத்தும் மெதுவாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மானாமதுரை,

மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக செல்கிறது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பாதையில் சென்று வருகின்றன. மானாமதுரையில் தொலைதுார வாகனங்கள் சென்று வர பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு, அந்த ரோட்டை ஒட்டியே புதிய பஸ் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. பைபாஸ் ரோட்டின் குறுக்கே மதுரை-ராமேசுவரம் அகல ரெயில் பாதை செல்கிறது. இங்கு தானியங்கி ரெயில்வே கேட் அமைக்கப்பட்டு ரெயில்கள் வரும்போது தானாகவே கேட் மூடப்பட்டும், ரெயில்கள் சென்ற பின் திறக்கப்பட்டும் வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ரெயில்வே கேட்டில் ஒரு முறை கேட் மூடப்படும்போது சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் இதில் அடங்கும்.

தற்போது மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படுவதால் ரெயில்வே கேட் உள்ள இடத்தில் ஒரு கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மேம்பால கட்டுமான பணிக்காக ரெயில்வே கேட் இடமாற்றம் செய்யப்பட்டு எமர்ஜென்சி கேட்டான இ-கேட் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற ரெயில்வே கேட்களில் ரெயில்கள் சென்ற உடன் கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள இ-கேட்டில் ரெயில் சென்ற 2 நிமிடங்கள் கழித்துதான் கேட் திறக்கப்படும். எனவே வாகன ஓட்டிகள் மெதுவாக நின்று செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்த எச்சரிக்கை பலகையும் பைபாஸ் ரோட்டில் பொருத்தப்பட்டுள்ளது. 

Next Story