கோவையில் வங்கி ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர்-கேமரா பொருத்தி தகவல்களை திருட முயற்சி


கோவையில் வங்கி ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர்-கேமரா பொருத்தி தகவல்களை திருட முயற்சி
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா பொருத்தி தகவல்களை திருட முயற்சி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை,

கோவை-திருச்சி சாலையில் பங்கு சந்தை அலுவலகம் அருகில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மையம் உள்ளது. இங்கு பணம் எடுக்க நேற்று ஒருவர் சென்றார். அப்போது அந்த ஏ.டி.எம்.மில் கார்டை சொருகினார். ஆனால் அந்த கருவி கழன்று வெளியே வந்துவிட்டது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.அந்த கருவி டெபிட் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடும் ஸ்கிம்மர் கருவி என்று தெரியவந்தது.

இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் அங்கு சென்றனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் ஏ.டி.எம். மையத்தை ஆய்வு செய்து ஸ்கிம்மர் கருவியை கைப்பற்றினார்கள். மேலும் பின் நெம்பர் பதிவு செய்யும் இடத்தில் ஒரு மைக்ரோ கேமரா பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதையும் போலீசார் கைப்பற்றி அவற்றை பொருத்திய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

கோவையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வங்கி ஏ.டி.எம்.களை மோசடி ஆசாமிகள் குறி வைத்து அங்கு ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி டெபிட் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடி வருகிறார்கள். அவற்றை கண்காணிக்குமாறு வங்கி அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் போது ஏ.டி.எம். எந்திரத்தை சோதனையிடுமாறு கூறி வருகிறோம். ஆனால் ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணியை சில வங்கிகள் தனியாருக்கு அவுட் சோர்சிங் முறையில் விட்டுள்ளன. அந்த பணியாளர்கள் ஏ.டி.எம். எந்திரங்களை கவனிக்கிறார்களா? என்று தெரியவில்லை. அவர்களின் சோதனையில் ஸ்கிம்மர் கருவியை கண்டுபிடித்து விடலாம். ஆனால் அதை செய்ய அவர்கள் முன்வருவதில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை-மேட்டுப்பாளையம் சாலை ஊட்டி பஸ் நிலையத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல கிராஸ்கட் சாலை, பீளமேடு ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத ஏ.டி.எம்.களை குறிவைத்து மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் கருவிகள் பொருத்தியிருந்தது தெரியவந்தது. அவற்றை பொருத்திய ஆசாமிகளை பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் கருவியில் உள்ள தகவல்களை கொண்டு போலி டெபிட் கார்டுகளை தயாரித்து விடுகிறார்கள். ஆனால் பின் நெம்பர் மட்டும் தெரியாது. பின் நெம்பரை தெரிந்து கொள்வதற்கு மோசடி ஆசாமிகள் இரண்டு வழிகளை கையாள்கிறார்கள்.

ஒன்று ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தும்போதே மேலே கேமரா பொருத்திய செல்போனையும் பொருத்தி விடுவார்கள். இது தெரியாதவர்கள் டெபிட் கார்டை சொருகி பணம் எடுக்கும் போது அதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கிம்மர் கருவியில் டெபிட் கார்டின் தகவல்கள் பதிவாகி விடும். அடுத்து பணம் எடுப்பவர் பின் நெம்பரை பயன்படுத்தும் போது அதுவும் மேலே மோசடி ஆசாமிகள் பொருத்தியுள்ள செல்போனில் பதிவாகி விடும். இதன் மூலம் டெபிட் கார்டு தகவல்கள் மற்றும் பின் நெம்பரை மோசடி ஆசாமிகள் தெரிந்து கொள்கிறார்கள்.

இரண்டாவதாக ஏ.டி.எம். மையத்தில் செல்போன் பொருத்தினால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்று நினைக்கும் மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் கருவி மட்டும் பொருத்தி தகவல்களை திருடி விடுவார்கள். அந்த தகவல்களை கொண்டு டெபிட் கார்டுதாரரின் பெயர், எண், கார்டு காலாவதியாகும் ஆண்டு, ரகசிய குறியீட்டு எண் அடங்கிய போலி டெபிட் கார்டுகளை தயாரித்து விடுவார்கள். டெபிட் கார்டு தகவலில் கார்டுதாரரின் செல்போன் எண்ணும் பதிவாகியிருக்கும். அந்த செல்போன் எண்ணுக்கு மோசடி ஆசாமிகள் போன் செய்து நாங்கள் வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று பேசி, ‘அவருடைய டெபிட் கார்டு, காலாவதியாகும் ஆண்டு, கார்டுதாரரின் பெயர் ஆகியவற்றை சரியாக சொல்லும் போது பெரும்பாலானவர்கள் வங்கியிலிருந்து தான் பேசுகிறார்கள் என்று நம்பி பின்நெம்பரை சொல்லி விடுவார்கள். ஆனால் பின்நெம்பரை சொன்ன சிறிது நேரத்திலேயே வங்கியிலிருக்கும் மொத்த பணத்தையும் மோசடி ஆசாமிகள் போலி டெபிட் கார்டு மூலம் வழித்தெடுத்து விடுவார்கள்.

இப்படி இரண்டு வழிகளில் மோசடி ஆசாமிகள் டெபிட் கார்டின் பின் நெம்பரை கண்டுபிடித்து விடுகிறார்கள்.

ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்துவதை தடுக்க வேண்டுமென்றால் அந்தந்த வங்கி அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் கருவியை ஏ.டி.எம்.மில் பொருத்தி விட்டு அதை எடுப்பதற்காக சிறிது நேரம் வெளியே காத்திருப்பார்கள். பலர் வந்து பணம் எடுத்து சென்ற பின்னர் அவர்களின் டெபிட் கார்டுகளின் தகவல்கள் பதிவாகியிருக்கும் ஸ்கிம்மர் கருவியை எடுக்க மோசடி ஆசாமிகள் வருவார்கள். அவர்கள் எப்போது ஸ்கிம்மர் கருவி பொருத்துகிறார்கள். எப்போது அதை எடுக்க வருகிறார்கள் என்று போலீசாரால் காத்து இருந்து பிடிக்க முடியாது.

போலி டெபிட் கார்டுகள் கோவையில் தயாரிக்கப்படவில்லை. பெங்களூரு, சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி டெபிட் கார்டுகளின் தகவல்களை திருடி அதை மோசடி ஆசாமிகளுக்கு விற்கும் கும்பல் கோவையில் நடமாடி வருகிறது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இவ்வளவு தகவல்களுக்கு இவ்வளவு ரூபாய் என்று வசூலித்துக் கொண்டு ஸ்கிம்மர் கருவிகளை மோசடி ஆசாமிகளிடம் கொடுத்து விடுவார்கள்.

கோவை-திருச்சி சாலையில் உள்ள ஏ.டி.எம்.மில் பொருத்தப்பட்டுள்ள வங்கி கேமராவில் ஸ்கிம்மர் கருவிகளை 2 ஆசாமிகள் பொருத்தியது பதிவாகி உள்ளது. இது தவிர ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள வேறு கேமராவில் இரண்டு மோசடி ஆசாமிகளின் முகங்கள் பதிவாகியிருக்கிறதா? என்று விசாரித்து வருகிறோம். ஸ்கிம்மர் மற்றும் கேமராவை பொருத்திய ஆசாமிகளை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

கோவையில் கடந்த சில நாட்களாக வங்கி ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி டெபிட் கார்டுகளின் தகவல்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவற்றை பொருத்துபவர்கள் யாரையும் இதுவரை போலீசார் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story