பட்டிவீரன்பட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலைமறியல்-பதற்றம்


பட்டிவீரன்பட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலைமறியல்-பதற்றம்
x
தினத்தந்தி 16 April 2018 10:00 PM GMT (Updated: 16 April 2018 8:20 PM GMT)

பட்டிவீரன்பட்டி அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. இதனால் அந்த கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பதற்றம் நிலவுவதையொட்டி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பட்டிவீரன்பட்டி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள கதிர்நாயக்கன்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில் கடந்த 14-ந்தேதி கொடிக்கம்பம் நட்டு கொடியேற்றப்பட்டது. நேற்று காலை அந்த இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை காணவில்லை.

மர்மநபர்கள், கொடிக் கம்பத்தை வெட்டி சாய்த்து எடுத்து சென்று பஸ் நிறுத்தம் அருகில் இருந்த கிணற்றில் போட்டு சென்றது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு திரண்டனர். பின்னர் அய்யம்பாளையம்-தாண்டிக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுமட்டுமின்றி சாலையின் குறுக்கே கற்களை போட்டும், மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியும் போக்குவரத்துக்கு தடை செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் சீமைராஜ், ஆத்தூர் தாசில்தார் ராஜ கோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில், கதிர்நாயக்கன்பட்டி கிளைச்செயலாளர் மலைச்சாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த மர்ம நபர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story