மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது - பா.ஜ.க. மாநில தலைவர் குற்றச்சாட்டு


மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது - பா.ஜ.க. மாநில தலைவர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 April 2018 4:15 AM IST (Updated: 17 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டங்கள் புதுவை மாநிலத்தில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியாக 25 சதவீதம் வரி வசூலித்து வரும் நிலையில், மாநில அரசு 28 சதவீதம் கேளிக்கைவரி வசூலித்து வருகிறது. தமிழகத்தில் திரையரங்குகளில் 8 சதவீதம் மட்டுமே கேளிக்கை வரியாக வசூலிக்கப்படுகிறது. அதையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திரையரங்குகள் மூடப்படுவதால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. திரையரங்குகளில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே திரையரங்குகளை திறக்க கவர்னரும், தலைமை செயலரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் பெயர் கிடைத்து விடும் என்பதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமியும், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியும் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

உஜ்வாலா பஞ்சாயத்து என்ற திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தை மாநில அரசு செயல்படுத்துவது போல் அமைச்சர் கந்தசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கான விண்ணப்பங்களில் கூட பிரதமர் மோடியின் படம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் உடனடியாக இடம்பெற வேண்டும். இல்லை என்றால் கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் முன்பு பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேலும் இது தொடர்பாக மத்திய அரசிடம் புகார் செய்யப்படும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ‘மோடி கேர்’ என்ற பெயரில் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கான விண்ணப்பம் புதுவை சுகாதாரத்துறை மூலம் இதுவரை யாருக்கும் வழங்கவில்லை. புதுவையில் அமைச்சர்களிடம் கருத்து ஒற்றுமை இல்லை. முதல்-அமைச்சர் கவர்னரை எதிர்ப்பதாக சொல்கிறார். ஆனால் அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story