ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். ‘சீட்’ வாங்கித்தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது


ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். ‘சீட்’ வாங்கித்தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவானவரை போலீசார் நூதனமாக நாடகமாடி கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் சாய் பாபா (வயது 53). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் மகள் ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். நுழைவுத்தேர்வு எழுதி இருந்தார்.

இந்தநிலையில் புதுவை காமராஜர் சாலையில் ஆலோசனை மையம் (கன்சல்டன்சி) நடத்தி வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (54) என்பவரிடம் ஜிப்மரில் தனது மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித்தருமாறு அணுகினார். இதற்காக அவரிடம் கிருஷ்ணமூர்த்தி ரூ.25 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ரூ.11 லட்சத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் சாய்பாபா வழங்கினார். மீதமுள்ள தொகையை ‘சீட்’ வாங்கித்தந்த பிறகு கொடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் உறுதி அளித்தபடி சாய்பாபா மகளுக்கு கிருஷ்ணமூர்த்தி எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது அடுத்த ஆண்டில் சீட்டு வாங்கித்தருவதாக உறுதி அளித்தார். இதையும் சாய்பாபா நம்பினார். ஒரு வருடம் பொறுமையாக காத்திருந்தார். ஆனால் அடுத்த முறையும் சீட்டு வாங்கித்தரவில்லை.

இதையடுத்து மோசடி செய்யப்பட்டதை அறிந்த சாய்பாபா, கிருஷ்ணமூர்த்தியிடம் தனது பணத்தை திரும்பித்தரும்படி கேட்டார். பணத்தை தருவதாக கூறி கிருஷ்ணமூர்த்தி இழுத்தடித்து வந்தார். இதற்கிடையே அவர் காமராஜர் சாலையில் நடத்தி வந்த ஆலோசனை மையத்தை பூட்டிவிட்டு மாயமானார். இதுகுறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் சாய்பாபா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தப்பி ஓடிய கிருஷ்ணமூர்த்தி குறித்து விசாரித்ததில் அவர் திருவனந்தபுரத்தில் இருப்பது தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் திட்டம் தீட்டினார்கள். அதன்படி அவரை தொடர்பு கொண்டு ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித்தரும்படி கேட்டு நாடகமாடினர். இதற்காக ஒரு பெரிய தொகையை தருவதாக கூறி போலீசார் நம்ப வைத்தனர்.

போலீசார் தான் இப்படி பேசி வலை விரித்து இருக்கிறார்கள் என்பது தெரியாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு கிருஷ்ணமூர்த்தி புதுவைக்கு வந்தார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story