ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படும் - கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்


ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படும் - கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
x
தினத்தந்தி 17 April 2018 4:45 AM IST (Updated: 17 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது முதல் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் மாதந்தோறும் தலா 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. ஒரு சில மாதங்களில் சில பிரச்சினைகள் காரணமாக வழங்கப்படாத நிலையும் ஏற்பட்டது.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி இலவச அரிசி உண்மையான ஏழைகளுக்குத்தான் வழங்கப்பட வேண்டும், பணக்காரர்களுக்கு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது சிவப்பு நிற ரேஷன்கார்டு தாரர்களுக்கு மட்டுமே இலவச அரிசி என்றும் மஞ்சள் நிற ரேஷன்கார்டு தாரர்களுக்கு வழங்கக்கூடாது என்றும் கூறினார்.

ஆனால் உண்மையான ஏழைகள் பலர் மஞ்சள் கார்டு வைத்திருப்பதால் அவற்றை சிவப்பு கார்டுகளாக மாற்றும் வரை இலவச அரிசி வழங்கவேண்டும் என்று அமைச்சர்கள் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து சிவப்பு ரேசன்கார்டுகளுக்கு 20 கிலோவும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோவும் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்தார். அதன்படி இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே மஞ்சள் கார்டு வைத்திருக்கும் ஏழைகள் தங்களுக்கு இலவச அரிசி வேண்டுமாயின் ரேஷன் கடைகளில் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விண்ணப்பங்களும் மக்களிடமிருந்து பெறப்பட்டு வந்தன.

இத்தகைய சூழ்நிலையில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் இலவச அரிசிக்கு பதிலாக பணத்தை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என்றும் கவர்னருக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கவர்னர் கிரண்பெடியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார்கள். அப்போது அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பணம் வழங்கினால் பல்வேறு குடும்பங்களில் குடும்பத்தலைவர் கைக்கு செல்லும் பணம் தவறான வழிகளில் செலவிடப்படும் என்று எடுத்து கூறினார்கள்.

ஆனால் இதுகுறித்து கவர்னர் கிரண்பெடி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கிருமாம்பாக்கம் பகுதியில் ஆய்வுக்கு சென்ற கவர்னர் கிரண்பெடியிடம், அப்பகுதி மக்கள் இலவச அரிசியே தங்களுக்கு வழங்கவேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு சிவப்பு நிற ரேஷன்கார்டு தாரர்களுக்கு தலா 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள்கார்டு தாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசியும் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள பதிவில், கள ஆய்வுகளின்போது இலவச அரிசியின் தரம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததாகவும், அரிசியின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என்றும், அரசின் தரம் குறித்து சான்று கிடைத்த பின்னரே அதற்கான தொகையை அரிசி வினியோகம் செய்தவர்களுக்கு வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Next Story