திருக்கனூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், ஊர் மக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்


திருக்கனூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், ஊர் மக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 17 April 2018 3:45 AM IST (Updated: 17 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்களை ஊர் மக்கள் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினர்.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே உள்ள சந்தை புதுக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயகீர்த்தி (வயது53). விவசாயி. இவருக்கு ஜீவா என்ற மனைவியும் 2 மகன் களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஜெயகீர்த்தி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் ஜெயகீர்த்தியின் சுவரில் ஏறி குதித்து வீட்டின் பின்பக்கம் வழியாக வந்தனர். அங்கு இருந்த கிரில் கேட்டின் பூட்டை உடைத்தனர்.

சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ஜெயகீர்த்தி, ஜீவா இருவரும் மின்விளக்குகளை போட்டு பார்த்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் கையில் பெரிய அரிவாளுடன் நின்று கொண்டு இருந்ததை பார்த்து திடுக்கிட்டு அலறினர். ஆனாலும் கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். இதனால் பதற்றத்துடன் இருந்த கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வெளியில் சென்று திருடன் திருடன் என அபயகுரல் எழுப்பினார்கள்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதனை கண்டதும் முகமூடி கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு அருகில் இருந்த சவுக்கு தோப்புக்குள் ஓடிஒளிந்தனர். கிராம மக்கள் ‘டார்ச் லைட்’ உதவியுடன் சவுக்கு தோப்பில் சல்லடை போட்டு தேடியும் திருடர்கள் சிக்கவில்லை. கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காட்டேரிக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி கொள்ளையர்கள் வீசி விட்டு சென்ற அரிவாள்களை பறிமுதல் செய்து தொடர்ந்து அவர்களை தேடி வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களாகவே சந்தைபுதுக்குப்பம் பகுதியில் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story