உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மணல் குவாரி மீண்டும் திறப்பு கட்டுமான தொழிலாளர்கள் மகிழ்ச்சி


உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மணல் குவாரி மீண்டும் திறப்பு கட்டுமான தொழிலாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 16 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-17T02:43:48+05:30)

மதுரை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து கரூர் மாவட்டம் மாயனூர் மணல் குவாரி மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காவிரி ஆற்றிலிருந்து மணல் எடுக்கப்பட்டு பல மாவட்டங்களுக்கு மணல் விற்பனை செய்யப்பட்டது. இதற்காக கரூர் மாவட்டத்தில் 8 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் மணல் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணல் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு மணல் மறுவிற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த மணல் குவாரிகளால் நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எதிர் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில் மணல் குவாரிகளை மூடவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் முசிறியை சேர்ந்த சீனிவாசன் உள்பட 8 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளை ஆய்வு செய்ய கமிஷன் நியமித்தது. அந்த கமிஷனின் அறிக்கைப்படி கரூர் மாவட்டம் மாயனூர் முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன.

இதையடுத்து பொதுப்பணித்துறையினர் இனி, “மணல் குவாரிகளில் முறைகேடு நடக்காதவாறு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும், மணல் அள்ளப்படும் இடத்திலிருந்து சேமிப்பு கிடங்கு வரை செல்லும் மணல் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும், குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மணல் அள்ளப்படும், 2 மற்றும் 3 யூனிட் அளவு மட்டும் ஒரு லாரிக்கு விற்பனை செய்யப்படும், ஆன்லைனில் மட்டும் மணல் புக் செய்து விற்பனை செய்யப்படும்” போன்ற உத்திரவாதங்களை உயர் நீதிமன்றத்தில் அளித்தனர். இந்த உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்ட மதுரை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி அன்று மாயனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட அனுமதி அளித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து சென்னை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் அள்ளப்படும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குவாரிக்கு உரிய இடத்தை அளந்து, மணல் எந்த அளவிற்கு எடுக்கப்பட வேண்டும் என்று குறியீட்டையும், எல்லை கல் நடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து அனுமதி வழங்கினர்.

இதனை தொடர்ந்து நேற்று மாயனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட தொடங்கியது.

ஒரு யூனிட் மணல் ரூ.1,330 என ஆன்லைனில் புக் செய்பவர்களுக்கு முறையாக விற்பனை செய்யப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் இந்த மணல் மறு விற்பனை மையம் செயல்படும். இந்த மணல் குவாரி தொடங்கப்பட்டதால் கரூர் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கப்படுவதால் கட்டுமான தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த குவாரிகளில் இருந்து திருப்பூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கும் மணல் அனுப்பப்படுகிறது. 

Next Story