ஆன்-லைன் விளையாட்டுகளால் ஏற்படும் விபரீதங்கள்
பல ஸ்மார்ட்போன் கேம்களும், வீடியோ கேம்களும் நமக்கே தெரியாமல் தீங்கு விளைவிக்கின்றன.
புளூவேல் என்ற விளையாட்டு தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுவதால், அதைப் பற்றியே அனைவரும் பேசினர். ஆனால், புளூ வேலைப் போல இன்னும் பல ஆபத்தான விளையாட்டுகளை இளைஞர்கள் தினமும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவை ஒரே அடியாக மரணத்தைத் தூண்டாவிட்டாலும், ‘ஸ்லோ பாய்சன்’ போல மெதுவாக தீங்கு விளைவித்துக்கொண்டிருக்கின்றன. ‘போக்கிமான் கோ’ என்ற மொபைல் விளையாட்டும் புளூவேல் போல விபரீதமான விளையாட்டுதான். இது ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் அறிமுகமாகி, பின் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இது 2016-ல் கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற சாதனையையும் படைத்தது. போக்கிமான் எனும் கார்ட்டூன் கதாபாத்திரத்தைக் கொண்டு, இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
முதலில் இந்த விளையாட்டு வரவேற்பை பெற்றது. ஆனால், பிறகுதான் இதன் விபரீதங்கள் தெரிய ஆரம்பித்தன. அமெரிக்காவில் 17 வயது பெண் விடியற்காலையில், வெகு தூரம் சென்று, யாரும் இல்லாத இடத்தில் போக்கிமானை பிடிப்பதற்கு பதில் சவத்தை கண்டுபிடித்தார். அப்போதுதான் இந்த விளையாட்டின் விபரீதங்களைப் பலரும் உணர ஆரம்பித்தார்கள். இந்த விளையாட்டை பயன்படுத்தி பல திருட்டு சம்பவங்களும், கொலைகளும்கூட நடந்துள்ளன. வாகனம் ஓட்டிச் செல்லும்போது இதை விளையாடியதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விளையாட்டுக்கு அடிமையாகி மக்கள் சுடுகாடுகள், அனுமதி மறுக்கப்பட்ட பல இடங்களுக்கு அத்துமீறி நுழைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இதுவரை எந்த விபரீதமும் இந்த விளையாட்டால் நடக்கவில்லை.
இதேபோல் பல ஸ்மார்ட்போன் கேம்களும், வீடியோ கேம்களும் நமக்கே தெரியாமல் தீங்கு விளைவிக்கின்றன. ‘கிராண்ட் தெப்ட் ஆட்டோ’ போன்ற வீடியோ கேம்ஸ் மக்களிடம் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இதில் ஒரு கட்டத்தில், விளையாடுபவர் ஒருவரை துன்புறுத்தி கேள்விகள் கேட்பதுபோல் விளையாட வேண்டும். அதில் சரியான விதிமுறைகள் எதுவும் இல்லாததால், ஆடுபவர் தன் விருப்பத்துக்கு அந்த நபரை துன்புறுத்த ஆரம்பித்தார். இந்த விளையாட்டும் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளான விளையாட்டுதான். பல ஆண்டுகளாக ஏதோ ஒரு ஆன்-லைன் விளையாட்டால் இளைஞர்கள் அடிமைப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். கேண்டி க்ரஷ், மினி மிலிடியா போன்ற விளையாட்டுகளை விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு நாளைக்கு 5 மணி நேரம் விளையாடுவது, நம்மை அதற்கு அடிமையாக்கி விடுகிறது.
Related Tags :
Next Story