குமரி மாவட்டத்துக்கும் ஆபத்து: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் சுப.உதயகுமார் பேட்டி


குமரி மாவட்டத்துக்கும் ஆபத்து: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் சுப.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 18 April 2018 2:15 AM IST (Updated: 17 April 2018 7:51 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்துக்கும் ஆபத்தாக உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என பச்சை தமிழகம் நிறுவனர் தலைவர் சுப.உதயகுமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

குமரி மாவட்டத்துக்கும் ஆபத்தாக உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என பச்சை தமிழகம் நிறுவனர் தலைவர் சுப.உதயகுமார் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் விவகாரம் 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி பச்சை தமிழகம் நிறுவனர் தலைவரும், அணுஉலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார் நேற்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்.

குமரி மாவட்டத்துக்கும் ஆபத்து 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தூத்துக்குடி மாநகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தூத்துக்குடியையே அழித்துக் கொண்டு இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அங்கு எந்த விரிவாக்கமும் நடைபெறக்கூடாது என்று பல்வேறு கிராம மக்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அ.குமரெட்டியபுரம் என்ற சிறிய கிராமத்தில் தொடங்கிய தீப்பொறி பல்வேறு கிராமங்களுக்கு பரந்து விரிந்து உள்ளது. இது தூத்துக்குடி மாவட்ட மக்கள் பிரச்சினை மட்டும் அல்ல.

இங்கு வெளியிடப்படும் நச்சுக்கழிவு, நச்சுக்காற்று கடல் வழியாகவும், நிலத்தடி நீர் வழியாகவும், அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் பரவி உள்ளது. குமரி மாவட்ட மக்களுக்கும் இது ஆபத்தாகவே உள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே ஆபத்தாக உள்ள இந்த திட்டத்தை அரசு நிரந்தரமாக மூட வேண்டும்.

ஆலையை மூடவேண்டும் 

மத்திய அரசு தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பாண்மையோடு நடத்தி அழிவு திட்டங்களை திணித்துக் கொண்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க திட்டத்தை மற்ற மாநிலங்களில் அறிவிக்கவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாது. ஏன் தமிழ் மக்களை மட்டும் திரும்ப திரும்ப அச்சுறுத்துகின்றனர். தமிழக அரசு உடனடியாக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மதித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று மத்திய அரசும் மக்களுக்கு மதிப்பளித்து ஆலையை மூடவேண்டும். அதற்காக போராடிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு பாராட்டுக்களையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மற்ற இடங்களில் போராடி வரும் மக்களுக்கும் ஆதரவை தெரிவித்தார்.

Next Story