அம்பத்தூர் அருகே சுங்கச்சாவடி மீது தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது


அம்பத்தூர் அருகே சுங்கச்சாவடி மீது தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 18 April 2018 5:00 AM IST (Updated: 18 April 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் அருகே சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்திய 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர்,

சென்னை போரூர் காரம்பாக்கம் முதல் தெருவை சேர்ந்தவர் அஜய் (வயது 20). இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு காரில் போரூரில் இருந்து செங்குன்றம் சென்றார்.

அப்போது அம்பத்தூர் அருகே உள்ள கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அவரிடம், கட்டணம் செலுத்துமாறு கூறினர். இருப்பினும், காரில் எம்.பி. பாஸ் ஒட்டியுள்ளேன், கட்டணம் செலுத்த முடியாது என அஜய் வாக்குவாதம் செய்தார்.

இதற்கு அங்கிருந்த ஊழியர்கள் எம்.பி. பாஸ் போலியானது, கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும், இல்லையெனில் காரை செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த அஜய், தனது நண்பர்களை போன் செய்து அழைத்தார்.

இதையடுத்து அங்கு வந்த அவரது நண்பர்கள் 6 பேர், ஊழியர்களிடம் தகராறு செய்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அம்பத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் மற்றும் அவரது நண்பர்கள் போரூர் பகுதியை சேர்ந்த கேபிரியேல் (19), பெரம்பூரை சேர்ந்த பூர்வீகன் (24), வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ் (22), ஆலப்பாக்கத்தை சேர்ந்த வெங்கட் (21), அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சுஜீத் (20), பெரம்பூர் குமாரசாமி தெருவை சேர்ந்த பிரணவ் (21) ஆகியோரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில், விக்னேஷ், வெங்கட்டை தவிர மற்றவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story