நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை ஒருவர் கைது


நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை ஒருவர் கைது
x
தினத்தந்தி 18 April 2018 4:00 AM IST (Updated: 18 April 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

திமிரி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு, 

வேலூர் மாவட்டம் திமிரியை அடுத்த சீயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 35), விவசாயி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தயாளனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன்கள் சரவணன் (45), எழிலரசன் (40) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன், எழிலரசன் மற்றும் அவர்களின் உறவினர் முனியப்பன் ஆகியோருக்கும் தயாளனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவரை ஒருவர் கற்களாலும், கட்டைகளாலும் தாக்கி கொண்டுள்ளனர். மேலும் சரவணன், எழிலரசன், முனியப்பன் ஆகியோர் அடித்ததில் தயாளன் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த சரவணன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தயாளனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்தனர். மேலும் அவர்களது உறவினர் முனியப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story