குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கடந்த 5 ஆண்டுகளில் 61 பேர் கைது


குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கடந்த 5 ஆண்டுகளில் 61 பேர் கைது
x
தினத்தந்தி 18 April 2018 3:45 AM IST (Updated: 18 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம்,

பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளை காக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் பாலியல் தொல்லையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்–சிறுமிகளை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது கடந்த 2013–ம் ஆண்டு முதல் கடந்த 2017–ம் ஆண்டு வரை 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 குறிப்பாக கடந்த 2016–ம் ஆண்டு 15 வழக்குகளும், கடந்த ஆண்டு 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் நபர்கள் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கடந்த ஆண்டு 1,296 பேர்களுக்கு இந்த விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவ–மாணவிகளுக்கு கெட்ட தொடுதல், நல்ல தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மாணவ–மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான தெளிவு ஏற்பட்டு தங்களை தற்காத்து கொள்ள உதவியாக உள்ளது.

மேலும், பாலியல் தொல்லை தொடர்பான சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், துண்டு பிரசுரம் வினியோகித்தல், பள்ளி சுவர்களில் பாலியல் தொல்லை தொடர்பாகவும், அதற்கான கடும் தண்டனை குறித்தும் விளக்கி விளம்பரம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் மாநில அளவில் மாவட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை குறைந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு பாலியல் தொல்லைக்கு உள்ளான 3 ஆதிதிராவிட குழந்தைகளுக்கு அந்த துறையின் சார்பில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

Next Story