கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை: 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை: 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 April 2018 3:15 AM IST (Updated: 18 April 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குன்னூர்,

குன்னூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறைக்கு புகார் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் டாக்டர் கருணாநிதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், செல்வராஜ் அருண்குமார் ஆகியோர் கொண்டு குழுவினர் குன்னூர் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

குன்னூர் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் குழுவினர் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

இது குறித்து அலுவலர் டாக்டர் கருணாநிதி கூறும்போது, குன்னூர் பஸ் நிலையத்தில் ஆய்வின் போது ஒரு கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மாதிரி சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் முடிவுகள் வந்த பின் நீதிமன்றத்தில் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது வழக்கு தொடரப்படும். இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும், என்றார். 

Next Story