பொங்கலூரை அடுத்த அலகுமலையில் குப்பையில் கிடந்த ஆதார் கார்டுகளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை


பொங்கலூரை அடுத்த அலகுமலையில் குப்பையில் கிடந்த ஆதார் கார்டுகளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 18 April 2018 4:15 AM IST (Updated: 18 April 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூரை அடுத்த அலகுமலை பகுதியில் குப்பையில் கிடந்த ஆதார் கார்டுகளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே அலகுலை கிராமத்தில் உள்ள பி.ஏ.பி.வாய்க்கால் ஓரத்தில் அந்த பகுதியில் உள்ளவர்கள் குப்பை கொட்டி வருகின்றனர். இந்த குப்பையில் நேற்று முன்தினம் மூடை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அந்த மூடையை அவிழ்த்து பார்த்துள்ளனர். பின்னர் மூடையின் உள்ளே இருந்த காகிதங்களை எடுத்து அந்த பகுதியில் உள்ள பெரியவர்களிடம் காண்பித்துள்ளனர். அதை வாங்கி பார்த்த போது, அவைகள் அனைத்தும் ஆதார் கார்டுகளாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.

அப்போது குப்பையுடன் கிடந்த மூடையில் ஏராளமான ஆதார் கார்டுகளும், எல்.ஐ.சி. அலுவலக கடிதங்கள், தொலைபேசி பில்கள், கல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு அனுப்பும் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தபால்களும் கிடந்தன. இதுகுறித்து உடனடியாக திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்படி அங்கு விரைந்து வந்த தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு கிடந்த ஆதார் கார்டுகள் உள்ளிட்ட பிற கடிதங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், குப்பையில் கிடந்த தபால் முகவரிகள் பெரும்பாலும் சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முகவரிகளாகவே இருந்தன. இதையடுத்து மூடையாக கிடந்த அந்த ஆதார் கார்டுகளையும், தபால்களையும் எடுத்து கொண்டு சென்ற அதிகாரிகள் அவற்றை நேற்றுகாலை திருப்பூர் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்சவேணி முன்னிலையில் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அம்சவேணி அந்த ஆதார் கார்டுகள் மற்றும் இதர தபால்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இதுகுறித்து உடனடியாக திருப்பூர் மாவட்ட தலைமை தபால் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். திருப்பூர் கோட்ட தபால்நிலைய கண்காணிப்பாளர் கோபிநாதன் உத்தரவின் பேரில் தபால் நிலைய அதிகாரிகள் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்தனர்.

இந்த தபால்கள் தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே முழு தகவல்கள் குறித்தும் விசாரணை நடத்த முடியும் என்று தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆதார் கார்டு பெறுவதற்காக பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில் பொறுப்பற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீதும், அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story