மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; நண்பர்கள் 3 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; நண்பர்கள் 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 April 2018 4:30 AM IST (Updated: 18 April 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் நண்பர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஜீயபுரம்,

திருச்சி உறையூர் சோழராஜபுரத்தை சேர்ந்தவர் சிபிசக்கரவர்த்தி (வயது 48). இவர் ஜீயபுரத்தை அடுத்த முத்தரசநல்லூர் மெயின்ரோட்டில் உள்ள ஜெயராம் என்பவருக்கு சொந்தமான குடோன் மற்றும் தென்னந்தோப்பு ஆகியவற்றுக்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

தென்னந்தோப்பில் கூலி வேலை செய்வதற்காக முத்தரசநல்லூர் மண்ணடி தெரு பகுதியை சேர்ந்த குமரன்(42), புற்றுக்கோவில் தெரு மூர்த்தி(30) ஆகியோரை சிபிசக்கரவர்த்தி அழைத்து செல்வது வழக்கம். இதில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நண்பர்கள் ஆனார்கள்.

இந்நிலையில் நேற்று மதியம் சிபிசக்கரவர்த்தி, தென்னந்தோப்பு வேலைக்காக குமரன், மூர்த்தி ஆகியோரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, குடோன் நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சிபிசக்கரவர்த்தி ஓட்ட, மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர். முருங்கப்பேட்டை ரெயில்வே கேட் அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் வந்தபோது ஈரோட்டில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சிபிசக்கரவர்த்தி தலை துண்டிக்கப்பட்டு பிணமானார். அவருடைய உடல் மோட்டார் சைக்கிளுடன் பஸ் சக்கரத்தில் சிக்கி, சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. அவருடைய தலை சிறிது தூரம் தள்ளி தனியாக கிடந்தது. மற்ற 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந் தனர்.

சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், படுகாயமடைந்து கிடந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த சிபிசக்கரவர்த்தியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதனால் விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், மோகன்ராம் மற்றும் போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் சிபிசக்கரவர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா கீழமாத்தூர் பகுதியை சேர்ந்த கதிர்வேல்(40) ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் பலியான சிபிசக்கரவர்த்திக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குமரனுக்கும் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மூர்த்திக்கு திருமணம் செய்ய அவருடைய உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் நண்பர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story