திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் திடீர் மூடல் பயணிகள் கடும் அவதி
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் திடீரென மூடப்பட்டதோடு, முன்பதிவு நேரம் குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் உள்ள ‘ஏ’ கிரேடு ரெயில் நிலையங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே திண்டுக்கல் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் வழியாக சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல்லில் 87 ரெயில்கள் நின்று செல்கின்றன.
அதன்மூலம் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு வசதிக்காக, 2 முன்பதிவில்லாத டிக்கெட் கவுண்ட்டர்கள், 2 முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்கள் உள்ளன. அதில் முன்பதில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.
முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களை பொறுத்தவரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டன. மேலும் முன்பதிவில்லா டிக்கெட் வழங்கும் 2 எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. இத்தனை வசதிகள் இருந்தும் முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் வரிசையை பார்க்கலாம்.
இந்த நிலையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் செயல்பட்டு வந்த 2 முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒன்று, நேற்று முன்தினம் மாலை திடீரென மூடப்பட்டது. தற்போது ஒரு கவுண்ட்டரில் மட்டுமே முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அதற்கு பதிலாக 2 முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒன்றில், முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட்கள், தட்கல் டிக்கெட்களை சேர்த்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முன்பதிவு டிக்கெட்டுகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒன்றை மூடியதோடு, நேரமும் குறைக்கப்பட்டதாலும் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். வெளியூர்களில் இருந்து சுற்றுலா வருபவர்கள் முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியாமல் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதுதவிர திண்டுக்கல்லில் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் இருந்து மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்து, ரெயில்களில் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் கவுண்ட்டர் மூடல் மற்றும் நேரம் குறைப்பு காரணமாக அவர்களால் இயல்பாக முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒன்றில், முன்பதிவு டிக்கெட்டுகளை வழங்குவதால் அதில் நீண்ட வரிசை ஏற்படுகிறது. வைகை, பழனி, திருச்செந்தூர், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் வரும்போது முன்பதில்லா டிக்கெட் எடுக்க பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதுபோன்ற நேரத்தில் 2 கவுண்ட்டர்களிலும் நீண்ட வரிசை காணப்படுகிறது.
இதற்கிடையே அதில் ஒரு கவுண்ட்டரில் முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் காத்திருக்க வேண்டியது இருக்கிறது. இதனால் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ரெயில்வே ஊழியர்களும் தவிக்கின்றனர். மேலும் வரிசையில் நீண்டநேரம் காத்திருந்தும் பலர் தட்கல் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்கின்றனர்.
இன்னும் ஒருசில நாட்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. அதன்பின்னர் வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் உயரும். அதில் பெரும்பாலானவர்கள் ரெயில்களில் தான் செல்வது வழக்கம். இதனால் அவர்கள் முன்பதிவு டிக்கெட் எடுக்க சென்றால் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
எனவே, கோடை விடுமுறைக்கு முன்பு மூடப்பட்ட முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டரை திறந்து, முன்பதிவு நேரத்தை முன்புபோன்று செயல்படுத்த வேண்டும் என்பது பயணிகள் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story