ரூ.363 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு


ரூ.363 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 April 2018 4:00 AM IST (Updated: 18 April 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

3 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.363 கோடியில் நடைபெற்று வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, கரூர் மாவட்டம் புதுப்பாளையம், மாயனூர் பகுதிகளில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் எடுக்க பணிகள் நடக்கின்றன. இதனை திண்டுக்கல் கலெக்டர் டி.ஜி.வினய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதுப்பாளையம், மாயனூர் மற்றும் குஜிலியம்பாறை, வடமதுரை, கோவிலூர் பகுதிகளில் உள்ள நீர்உந்து நிலையங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

நத்தம், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் ஆகிய 3 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,276 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க, ரூ.363 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கரூர் புதுப்பாளையம், மாயனூர் அருகே காவிரி ஆற்றில் ராட்சத நீர்சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து தினமும் 48.10 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படும்.

மேலும் குஜிலியம்பாறை, வடமதுரை, கோவிலூர், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்உந்து நிலையங்கள், பல்வேறு இடங்களில் இடைநிலை நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுதவிர 99 தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் நத்தம், திண்டுக்கல், சாணார்பட்டி பகுதிகளில் 631 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படும்.

அதற்கான குழாய் பதிக்கும் பணிகள், புதிய நீர்தேக்க தொட்டிகள் மற்றும் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி உள்பட அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. மேலும் திட்டத்துக்காக 85 இடங்களில் மின்இணைப்புகள் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களில் மின்இணைப்புகள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே 33 தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் மூலம் நத்தம் பேரூராட்சி உள்பட 170 குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகித்து சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 66 தொட்டிகள் மூலம் விரைவில் 461 குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகித்து சோதனை செய்யப்படும். அதையடுத்து நத்தம் பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.

Next Story