பா.ஜனதா மந்திரியை சந்திக்க உத்தவ் தாக்கரே மறுப்பு


பா.ஜனதா மந்திரியை சந்திக்க உத்தவ் தாக்கரே மறுப்பு
x
தினத்தந்தி 18 April 2018 3:13 AM IST (Updated: 18 April 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மந்திரியை சந்திக்க உத்தவ் தாக்கரே மறுத்து விட்டதாக தெரிகிறது.

மும்பை,

ரத்னகிரி மாவட்டம் நானார் பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் இந்த திட்டத்திற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவும் ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இதுகுறித்து எழுதப்பட்டிருந்த தலையங்கத்தில், இந்த திட்டத்தை கடுமையாக சாடி இருந்தனர்.இந்தநிலையில் நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குறித்தும், அகமத்நகரில் சிவசேனா தொண்டர்கள் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் நேரில் சந்தித்து பேச நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை உத்தவ் தாக்கரே ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

பா.ஜனதா மந்திரியை உத்தவ் தாக்கரே சந்திக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே மேலும் விரிசல் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. 

Next Story