போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 April 2018 4:15 AM IST (Updated: 18 April 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

அறச்சலூர் அருகே உள்ள சில்லாங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவருடைய மனைவி ஜீவிதா (வயது 33). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக ஜீவிதா கணவரை பிரிந்து விட்டார்.

இந்த நிலையில் ஜீவிதாவுக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் வெள்ளோடு பெரளிக்காடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜீவிதாவும், அந்த நபரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள். திடீரென இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அந்த நபர், ஜீவிதாவை பிரிந்து தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் ஜீவிதா அந்த நபரின் வீட்டுக்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். அப்போது ஜீவிதாவை, அந்த நபரின் தந்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து மனு கொடுப்பதற்காக ஜீவிதா நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ஜீவிதா அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story