பஸ்-மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதல்; ராணுவ வீரர் சாவு
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
பவானி,
பவானி அருகே உள்ள அத்தாணி கூகலூர் கொல்லமடை வீதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் சுந்தர்ராஜ் (வயது 26). திருமணம் ஆகாதவர். இவர் அருணாச்சலபிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தர்ராஜ் பெற்றோரை பார்க்க கூகலூர் கொல்லமடைக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் அவர் சொந்த வேலையாக சித்தோட்டில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். சித்தோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகே வந்தபோது, ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. இதில் எதிர்பாராதவிதமாக அந்த பஸ்சும், சுந்தர்ராஜின் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட சுந்தர்ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர்அவரை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிஓடி விட்டார். இதுகுறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த சுந்தர்ராஜின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது.
Related Tags :
Next Story