உளவுத்துறை போலீஸ்காரராக நடித்த வாலிபர் கைது
தேனி அருகே உளவுத்துறை போலீஸ்காரராக நடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தொழிலாளியின் குடும்ப பிரச்சினை தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து பேச வந்தபோது அவர் சிக்கினார்.
தேனி,
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி அமராவதி பள்ளி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கும், வேறு ஒரு நபருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இவருடைய வீட்டுக்கு ஒரு நபர் வந்துள்ளார். அவர் தன்னை உளவுத்துறை (சி.ஐ.டி.) போலீஸ்காரர் என்று அறிமுகம் செய்துள்ளார்.
பின்னர் மகேந்திரனிடம், உங்களுடைய குடும்ப பிரச்சினையை பேசி முடிக்க வந்திருக்கிறேன் என்று அந்த நபர் கூறினார். இதனால், அவரை வீட்டுக்குள் மகேந்திரன் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.
வீட்டில் உட்கார்ந்து அவர் கட்டப்பஞ்சாயத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றுள்ளார். ஆனால், அவரின் நடவடிக்கையில் மகேந்திரன் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்கள் அந்த நபரிடம், அவர் பற்றி பல கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதற்கிடையே மகேந்திரன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உளவுத்துறை போலீஸ்காரர் என்று சொன்ன நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த மரக்காமலை என்பவருடைய மகன் குமார் (29) என்பதும், கண்மாயில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் குடும்ப பிரச்சினையை பேசி முடிப்பதற்காக உளவுத்துறை போலீஸ்காரர் என்று ஏமாற்றியதாகவும் தெரியவந்தது.
இதுகுறித்து மகேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குமாரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவர் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு சுந்தரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பெரியகுளம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். உளவுத்துறை போலீஸ்காரர் என்று நடித்து வாலிபர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story