கூடலூர் அருகே கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா
கூடலூர் அருகே கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, பளியன்குடியிருப்பு பகுதியில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
கூடலூர்,
தமிழக-கேரள மாநில எல்லையில் தேனி மாவட்டம், கூடலூர் பளியன் குடியிருப்பு பகுதியில் மலைமேல் கண்ணகி கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. கூடலூர் அருகே பளியன்குடியிருப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு செல்ல மலைப்பாதை உள்ளது. விழா நடைபெறும் ஒரு நாள் மட்டும் இந்த பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று கோவிலில் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இதே போன்று கேரள மாநிலம் குமுளியில் இருந்து ஜீப் போன்ற வாகனங்கள் செல்ல சாலை வசதி செய்யப்பட்டு உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று ஒரு நாள் மட்டுமே போக்குவரத்திற்காக கேரள மாநில வனத்துறை சார்பில் இந்த சாலையை திறந்து விடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, கூடலூர் அருகே உள்ள பளியன்குடியிருப்பு பகுதியில் நேற்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பச்சை மூங்கிலில் பட்டுதுணி கட்டப்பட்டு கண்ணகி உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஏற்றப்பட்டது.
முன்னதாக கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகளும், பொங்கல் வைத்தும்் பக்தி பாடல்கள் பாடியும், பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் கண்ணகி கோவில் அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் பி.எஸ்.எம்.முருகன், கூடலூர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், வனவர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story