அனைத்து தரப்பினரும் பயன்பெற அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது அமைச்சர் பேச்சு


அனைத்து தரப்பினரும் பயன்பெற அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 19 April 2018 4:30 AM IST (Updated: 19 April 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து தரப்பினரும் பயன்பெற அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று ரேஷன்கடை திறப்பு விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா காவாப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் புதிய முழுநேர ரேஷன்கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதிய ரேஷன்கடையை திறந்து வைத்து பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 40 ரேஷன் கடைகளும், கூட்டுறவு துறையின் கீழ் 1004 ரேஷன் கடைகளும், 9 மகளிர் ரேஷன்கடைகளும் என மொத்தம் 1053 ரேஷன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள ரேஷன் கடை இந்த மாவட்டத்தில் 476- வது முழுநேர ரேஷன் கடையாகும்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் தர்மபுரி மாவட்டத்தில் 67 புதிய ரேஷன்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. தேவையுள்ள இடங்களில் புதிய ரேஷன்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க தொலைதூரத்திற்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மேம்பாட்டிற்காக அனைத்து தரப்பினரும் பயன்பெற தமிழக அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த விழாவில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அமீதுல்லா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.அரங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கோபால், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், தாசில்தார் அருண்பிரசாத் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

Next Story