தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 1½ லட்சம் வீடுகளில் கழிப்பறைகள்
தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 1½ லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சிவக்குமார், உதவி திட்ட அலுவலர் அருணாசலம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமநிதி உள்ளிட்ட அதிகாரிகள், தூய்மை இந்தியா இயக்க ஊக்குவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தில் சிறந்த சுகாதார ஊக்குவிப்பாளராக தேர்வாகி பிரதமரிடம் விருது பெற்ற ஆலமரத்துப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜலட்சுமி மற்றும் சிறந்த ஊக்குவிப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டர் வழங்கினார். இதையடுத்து கலெக்டர் டி.ஜி.வினய் பேசியதாவது:-
நாட்டு மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதமர், தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினார். இது நாடு முழுவதும் பெரிய அளவில் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு வீடுகள் தோறும் கழிப்பறைகள் கட்டுவதற்கு, அரசு மானியம் வழங்கி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் 1½ லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மேலும் கழிப்பறை கட்டுவதற்கு இடவசதி இல்லாத மக்களுக்காக, பொதுக்கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அனைவரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். நாம் எத்தனையோ துறைகளில் முன்னேறி இருந்தாலும், கழிப்பறையை பயன்படுத்துவதில் பின்னடைவு உள்ளது.
தற்போது தனிநபர் இல்ல கழிப்பறைகள், பொதுக்கழிப்பறைகள் என கட்டி முடித்துள்ளோம். அதை மக்கள் பயன்படுத்த வைப்பதே, ஊக்குவிப்பாளர்களின் அடுத்த இலக்காக இருக்க வேண்டும். ஊக்குவிப்பாளர்கள் தங்களுடைய கிராமம் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கழிப்பறைகள் இல்லாத வீடுகளில் உள்ள பெண் குழந்தைகளை சந்தித்து, கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய அவசியம். திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தால் ஏற்படும் சுயகவுரவ பாதிப்பு குறித்து விளக்க வேண்டும். கழிப்பறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பெண் குழந்தைகளை உறுதிகொள்ள செய்ய வேண்டும். இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளையும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாதவையாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story