பாதாமி தொகுதியில் போட்டியிடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை சித்தராமையா சொல்கிறார்


பாதாமி தொகுதியில் போட்டியிடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை சித்தராமையா சொல்கிறார்
x
தினத்தந்தி 19 April 2018 5:13 AM IST (Updated: 19 April 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

பாதாமி தொகுதியில் போட்டியிடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் சார்பில் 218 தொகுதிகளுக்கு கடந்த 15-ந் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

பாதாமி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள சிம்மனகட்டிக்கு டிக்கெட் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக தேவராஜ் பட்டீலுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்ற வேட்பாளர்களுக்கு ‘பி‘ பாரத்தை கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் வழங்கி வருகிறார். ஆனால் பாதாமி தொகுதி வேட்பாளர் தேவராஜ் பட்டீலுக்கு மட்டும் அந்த ‘பி பாரம்‘ வழங்குவதை காங்கிரஸ் நிறுத்தி வைத்துள்ளது. அதாவது, முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு பாதாமியில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதற்காகவே, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேவராஜ் பட்டீலுக்கு ‘பி‘ பாரம் வழங்கப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேப் போல் மேலும் 4 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ‘பி‘ பாரம் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சித்தராமையா நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“பாதாமி தொகுதியிலும் போட்டியிடுமாறு அந்த தொகுதி நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். எனக்கு அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அங்கு குழப்பம் நீடித்து வருவதாக கூறினர். நான் போட்டியிட்டால் அந்த குழப்பம் தீர்ந்து, அதனால் கட்சிக்கு பலன் கிடைக்கும் என்று கூறினர். பாதாமி தொகுதியில் போட்டியிடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இதுபற்றி கட்சி மேலிடத்திடம் மிக தெளிவாக கூறி இருக்கிறேன். 2 தொகுதிகளில் போட்டியிட நான் விரும்பவில்லை“.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story