உங்களுக்கு என்று ஒரு டிஜிட்டல் உதவியாளர் !


உங்களுக்கு என்று ஒரு டிஜிட்டல் உதவியாளர் !
x
தினத்தந்தி 21 April 2018 3:15 AM IST (Updated: 19 April 2018 1:39 PM IST)
t-max-icont-min-icon

தொழிலதிபர்கள், அதிகாரிகள் போன்றோர் தவிர எல்லோரும் உதவியாளர் வைத்துக்கொள்ள முடிவதில்லை.

மக்கே நமக்கு என்று ஒரு ‘டிஜிட்டல் உதவி யாளரை’ வைத்துக்கொள்ளும் நாள் நெருங்கியிருக்கிறது. சிறுசிறு பணிகளில் இந்த எந்திர உதவியாளர் நமக்கு உதவுவார்.

கேட்பதற்கு விந்தையாக இருந்தாலும், ஏற்கனவே கோடிக்கணக்கானவர்கள் இந்த டிஜிட்டல் உதவியாளரை தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திக்கொண்டிருக் கிறார்கள்.

‘டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ்’ என்று கூறப்படும் இந்த எந்திர உதவியாளர்களின் எண்ணிக்கை, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அதிகரித்துக்கொண்டே போகிறது. அமேசான் நிறுவனம் முதல் முறையாக இத்தகைய கருவியை ‘அலெக்சா’ என்ற தொழில்நுட்பம் மூலம், ‘எகோ’ மற்றும் ‘டாட்’ ஒலிபெருக்கி வடிவில் அறிமுகம் செய்தது.

வானிலை நிலவரம், செய்தி, சமையல் குறிப்புகள் என அனைத்தையும் அலெக்சா உங்களுக்குச் சொல்லும். சமீபத்தில் அக்செஞ்சர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரேசில், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளைவிட இந்தியர்களுக்கு ‘டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ்' கருவிகளில் அதிக ஆர்வம் இருப்பது தெரியவந்தது.

இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இணையப் பயனாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 2018 இறுதிக்குள் குரல் மூலம் இயக்கக்கூடிய கருவிகளை வைத்திருப்பார்கள்.

இந்திய இணையப் பயனாளர்களில் 39 சதவீதம் பேர் அத்தகைய கருவியை இந்த ஆண்டு வாங்குவோம் என்று கூறுகின்றனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 4.5 கோடி குரல் மூலம் இயங்கும் கருவிகள் விற்கப்பட்டிருக்கின்றன.

டிஜிட்டல் வேலைக்காரராக இருக்கும் கருவியை அமேசான் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. கூகுள் நிறுவனமும் ‘கூகுள் ஹோம்’ என்ற அம்மாதிரியான கருவியை இந்தியச் சந்தைகளில் வெளியிடுகிறது.

அமேசான் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறு வனங்களின் கருவிகளும் நம் வீட்டின் வை-பை மூலம் இயங்கும் ஒலிபெருக்கிகளாக உள்ளன.

அவை உங்கள் வீட்டில் நிறுவப்படும்போது உங்கள் குரலை அந்தக் கருவிகள் உணர்வதற்காக, சோதனை செய்யும் நோக்கில் அந்தக் கருவிகள் கூறும் சில அடிப்படை கட்டளைகளை உங்கள் குரலில் பதிவு செய்ய வேண்டும்.

அந்தக் கருவிகளுடன் இணைக்கப்பட்ட செயலிகளை அந்த நிறுவனங்கள் வழங்குகின்றன. அமேசானின் செயலியின் பெயர் ‘ஸ்கில்ஸ்’, கூகுளின் செயலியின் பெயர் ‘ஆக்சன்ஸ்’. இந்தச் செயலிகளில், உங்கள் டிஜிட்டல் உதவியாளர் முன்னுரிமை கொடுக்க வேண்டிய வானொலி நிலையங்கள், செய்தி நிறுவனங்கள் என அனைத்தையும் பதிவு செய்து விடலாம்.

அமேசான் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களின் தொழில்நுட்பமும் ஆங்கிலத்தில் மட்டுமே கட்டளைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அதுவும் இந்தியத்தன்மையுடன் பேசப்படும் ஆங்கிலத்தை புரிந்துகொள்வது அக்கருவிகளுக்குச் சவாலாக இருக்கும்.

அமேசான் தனது டிஜிட்டல் வேலைக்காரரை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தபோது ‘இந்திய ஆங்கிலத்தையும்' புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கி இருந்தது.

கூகுளின் புதிய கருவி கூடுதலாக இந்தி மொழியையும் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும் எனக் கூறப்படுகிறது. மேற்கொண்டு பல இந்திய மொழிகளைச் சேர்ப்பதன்மூலம் இன்னும் இந்தியச் சந்தையை அதிக அளவில் விரிவடைய வைக்கலாம் என்று இரு நிறுவனங்களும் கருதுகின்றன.

இப்போது ஒலிபெருக்கிகளில் மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் இருந்தாலும், வருங்காலங்களில் தொலைக்காட்சி, வானொலி, குக்கர், குளிர்சாதனப் பெட்டி, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய அனைத்திலும் குரலைக் கொண்டு மனிதர்களின் கட்டளையை அறிந்து அவற்றை நிறைவேற்றும் வசதி வரும்.

இப்போதைக்கு இந்தத் தொழில்நுட்பம் பணக்காரர்களை இலக்காக வைத்தே அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், தொழில்நுட்பங்களைக் கையாள படிப்பறிவு தடையாக இருக்கும் பாமர மக்களுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்தியாவின் கிராமப்புற விவசாயி ஒருவருக்கு தான் வாங்கும் புதிய செல்போனை இயக்கும் முறைகளை கற்றுக்கொள்வதைவிட, அதை குரல் மூலம் இயக்கும் வசதி எளிமையானதாக இருக்கும்.

குரல் மூலம் கருவிகளுக்குக் கட்டளை இடும் தொழில்நுட்பம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், இவை ஏற்கனவே அமலில் உள்ள நாடுகளில் பாதுகாப்பு குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.

இணையம் மூலம் கட்டுப்படுத்தப்படும் இந்தக் கருவிகள், ஒருவரின் கட்டளைகளைக் கேட்டு நிறைவேற்றுவதற்கு அவர் எப்போது பேசுகிறார் என்பதைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் அவரது அந்தரங்கம் பாதிக்கப்படலாம்.

ஒருவேளை அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உங்களை உளவுபார்த்து உங்களைப் பற்றிய தகவல்களைச் சேமிக்கலாம். அவ்வாறு சேமிக்கப்படும் தகவல்களை என்ன செய்கின்றன என்று யாருக்கும் தெரியாது. அரசுகள் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அந்த நிறுவனங்களிடம் இருந்து பெறலாம்.

இந்தச் சந்தேகங்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை பதிலேதும் தெரிவிக்கவில்லை.

இணையதள பாதுகாப்பு மற்றும் அந்தரங்க உரிமை குறித்த கவலைகள் அதிகமாகிவரும் இந்தக் காலத்தில், இவற்றைப் பற்றியும் இந்த டிஜிட்டல் உதவியாளர்களை வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் டிஜிட்டல் பாதுகாப்பு நிபுணர்கள்.

வசதியுடன் கூடவே கவலையும் வரத்தானே செய்யும்?

Next Story